ஓடும் மின்சார ரெயிலில் தொங்கியபடி நடைமேடையில் காலை உரசி ஆபத்தான பயணம் செய்த பள்ளி மாணவி


ஓடும் மின்சார ரெயிலில் தொங்கியபடி நடைமேடையில் காலை உரசி ஆபத்தான பயணம் செய்த பள்ளி மாணவி
x

ஓடும் மின்சார ரெயிலில் தொங்கியபடி நடைமேடையில் காலை உரசி ஆபத்தான பயணம் செய்த பள்ளி மாணவி: சமூக வலைதளங்களில் பரவிய வீடியோவால் பரபரப்பு.

ஆவடி,

சென்னை வேளச்சேரியில் இருந்து திருவள்ளூர் நோக்கி நேற்று முன்தினம் மாலை புறநகர் மின்சார ரெயில் சென்றது. ஆவடி ரெயில் நிலையத்தில் இருந்து ரெயில் புறப்பட்டதும், அந்த ரெயிலில் ஏறிய பள்ளி மாணவி ஒருவர், மாணவர்களுக்கு சவால் விடும் வகையில் ஓடும் மின்சார ரெயிலில் படிக்கட்டில் தொங்கியபடி, ஒரு காலை நடைமேடையில் உரசியபடி ஆபத்தான பயணம் செய்தார்.

ரெயிலில் இருந்த பயணிகள் இதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அந்த ரெயில் பெட்டியில் பயணம் செய்த ஒருவர், ஆபத்தை உணராத பள்ளி மாணவியின் இந்த செயலை செல்போனில் வீடியோ எடுத்து சமூகவலைதளங்களில் பதிவேற்றம் செய்தார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

கல்லூரி மாணவர்கள்தான் இதுபோல் ஓடும் மின்சார ரெயிலில் தொங்கியபடி நடைமேடையில் கால்களை உரசியபடியும், அரிவாள், கத்தியை உரசியபடியும் ஆபத்தான பயணம் செய்து வந்தனர். மாணவர்களுக்கு நாங்களும் சளைத்தவர்கள் இல்லை என்பதுபோல் பள்ளி மாணவியின் இந்த செயல் அமைந்து இருப்பது வேதனை அளிப்பதாக பயணிகள் தெரிவித்தனர். ஆபத்தை உணராத இதுபோன்ற சம்பவங்களால் சில நேரங்களில் உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்க ரெயில்வே போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.


Next Story