பள்ளி மாணவியை காரில் கடத்தி பாலியல் தொல்லை
நெமிலி அருகே பள்ளி மாணவியை காரில் கடத்தி பாலியல் தொல்லை கொடுத்ததாக 3 பேர் மீது புகார் செய்யப்பட்டுள்ளது.
நெமிலியை அடுத்த திருமால்பூர் பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் சம்பவத்தன்று மாலையில் வீட்டிற்கு அருகே உள்ள கடைக்கு சென்று பேனா வாங்கிக்கொண்டு வீடு திரும்பினார். அப்போது அதேப் பகுதியை சேர்ந்த 3 பேர் மாணவியை காரில் கடத்தி சென்றதாகவும், இரவு முழுவதும் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. பின்னர் அடுத்தநாள் மதியம் பள்ளுரில் இறக்கிவிட்டு வீட்டிற்கு செல்லுமாறு கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டனர்.
இதையடுத்து வீட்டுக்கு சென்ற மாணவி நடந்த சம்பவத்தை தாய் மற்றும் மாமாவிடம் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் தாய் இதுகுறித்து ராணிப்பேட்டை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரிடம் செல்போனில் தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
மேலும் நேற்று நெமிலி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.