வீட்டுமனை புரோக்கருக்கு அரிவாள் வெட்டு; ஊராட்சி தலைவர்-மகன் மீது வழக்கு
வீட்டுமனை புரோக்கரை அரிவாளால் வெட்டிய ஊராட்சி தலைவர்-மகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
ஜீயபுரம்:
திருச்சி ஸ்ரீரங்கம் மேலூர் மலைமேடு கள்ளர் தெரு பகுதியை சேர்ந்தவர் பரமசிவம்(வயது 37). வீட்டுமனை புரோக்கர். இவருக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலம் அல்லூர் கிராமத்தில் உள்ளது. அந்த நிலத்தை, அந்த பகுதியை சேர்ந்த அல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் விஜயேந்திரனிடம் விற்பனை செய்துள்ளார். ஆனால் பத்திரப்பதிவு செய்து கொடுக்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் பரமசிவம், தனது மனைவி, குழந்தைகள் ஆகியோருடன் அல்லூரில் உள்ள தனது மாமியாரை பார்த்துவிட்டு, ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர். அப்போது விஜயேந்திரன் மற்றும் அவரது மகன் மணிகண்டன் ஆகியோர் அவர்களை வழிமறித்து தகாத வார்த்தைகளால் திட்டி, அரிவாளால் பரமசிவத்தின் தலையில் வெட்டியதாகவும், உருட்டுக்கட்டையால் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதில் தலையில் பலத்த காயமடைந்த பரமசிவம் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து பரமசிவம் அளித்த புகாரின்பேரில் விஜயேந்திரன், மணிகண்டன் ஆகியோர் மீது ஜீயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.