சென்னை ஐ.ஐ.டி.யில் பரபரப்பு சம்பவம் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை


சென்னை ஐ.ஐ.டி.யில் பரபரப்பு சம்பவம் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
x

சென்னை ஐ.ஐ.டி.யில் படிக்கும் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார், இன்னொரு மாணவர் மாத்திரை சாப்பிட்டு உயிருக்கு போராடி வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை,

சென்னை ஐ.ஐ.டி மாணவர் ஸ்டீவன் சன்னி ஆல்பட் (வயது 25). இவரது தந்தை சன்னி ஆல்பட், மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர். ஸ்டீவன் சன்னி சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள ஐ.ஐ.டி.யில் முதுநிலை எலக்ட்ரிக்கல் என்ஜினீயரிங் பிரிவில் 2-ம் ஆண்டு படித்துவந்தார். இந்தநிலையில் கடந்த சில நாட்களாகவே படிப்பில் சரியாக கவனம் செலுத்தமுடியாத காரணத்தால் ஒழுங்காக சாப்பிட முடியாமல் தவித்து வந்தார்.

இதனிடையே நேற்று முன்தினம் இரவு ஸ்டீவன் சன்னியின் அறைக்கதவு நீண்டநேரமாக திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த மாணவர்கள் அறைக்கதவை தட்டிப்பார்த்தனர். ஆனால் அந்த அறை உள் பக்கமாக தாழிடப்பட்டிருந்தது. மாணவர்கள் அறையின் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தனர். அப்போது ஸ்டீவன் சன்னி தூக்கில் பிணமாக தொங்கிக்கொண்டிருந்தார். உடனடியாக விடுதி மேலாளர் கோட்டூர்புரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

வகுப்புக்கு செல்லவில்லை

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கோட்டூர்புரம் உதவி கமிஷனர் ஸ்ரீகாந்த், இன்ஸ்பெக்டர் விஜயன் அறைக்கதவை உடைத்து தூக்கில் தொங்கிக்கொண்டிருந்த ஸ்டீவன் சன்னியை கீழே இறக்கினர். இதையடுத்து பிரேத பரிசோதனைக்காக அவரது உடல் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுசெல்லப்பட்டது. இது தொடர்பாக அவரது தந்தைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, மராட்டிய மாநிலத்தில் இருந்து அவர் சென்னை வந்தார்.

முதற்கட்ட விசாரணையில் கடந்த 2 மாதமாகவே ஸ்டீவன் சன்னி வகுப்புக்கு சரியாக போகவில்லை. சரியாக படிக்க முடியாமல் மன உளைச்சலில் இருந்ததாகவும், சம்பவத்தன்று தான் தங்கியிருந்த விடுதியின் அறையில், யாரும் இல்லாத நேரத்தில் உள்பக்கமாக தாழிட்டு தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இவ்வாறு போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

கமிஷனர் பேட்டி

இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

மாணவன் தூக்கில் தொங்கிய அறை உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்தது. அவர் தற்கொலை செய்ததற்கான காரணத்தை விளக்கிக்கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார். அவரது பெற்றோரிடமும் விசாரணை நடந்து வருகிறது. சந்தேக மரணம் என்ற சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மற்றொரு மாணவர்

இதற்கிடையே கர்நாடக மாநிலத்தை சேர்ந்த விகேஸ் (21) என்ற மாணவரும் சரியாக படிக்க முடியாமல் மன உளைச்சலில் இருந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை சாப்பிட்டு அவர் தங்கியிருந்த அறையில் மயங்கிக்கிடந்தார். இதைப்பார்த்த சக மாணவர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவர் எதற்காக தூக்க மாத்திரை சாப்பிட்டார்? என்று கோட்டூர்புரம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

தொடரும் தற்கொலைகள்

கடந்த சில ஆண்டுகளாகவே ஐ.ஐ.டி. மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு கேரளாவை சேர்ந்த பாத்திமா தற்கொலை செய்துகொண்டார். அதுபோல கடந்த 2021-ம் ஆண்டு சென்னை ஐ.ஐ.டி.யில் எரிந்த நிலையில் மாணவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது. தொடர்ந்து நடந்த விசாரணையில் அந்த மாணவரின் பெயர் உன்னிகிருஷ்ணன் நாயர் என்பது தெரியவந்தது. அவரும் கேரளாவை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பேராசிரியர்கள் மீது பாலியல் குற்றசாட்டுகளும், சாதிப்பாகுபாடு, ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்களால் தரப்படும் அதிக மனஅழுத்தம் போன்ற சம்பவங்களாலும் அதிகமான தற்கொலைகள் அரங்கேறுகின்றன. தொடர்ந்து ஐ.ஐ.டி.யை சேர்ந்த மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது பெற்றோர்கள் மத்தியில் பெரும் பீதியை கிளப்பியுள்ளது.


Next Story