தனி வங்கிக்கணக்கு தொடங்கப்படும்: வழக்குகளுக்கு விதிக்கும் அபராத தொகையில் கலைஞர் நூலகத்துக்கு புத்தகங்கள்-மதுரை ஐகோர்ட்டு ஏற்பாடு
வழக்குகளுக்கு விதிக்கப்படும் அபராத தொகையை பயன்படுத்தி கலைஞர் நூலகத்துக்கு புத்தகங்கள் வாங்க மதுரை ஐகோர்ட்டு ஏற்பாடு செய்திருக்கிறது.
வழக்குகளுக்கு விதிக்கப்படும் அபராத தொகையை பயன்படுத்தி கலைஞர் நூலகத்துக்கு புத்தகங்கள் வாங்க மதுரை ஐகோர்ட்டு ஏற்பாடு செய்திருக்கிறது.
பரிசீலனை
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே வீரசிகாமணி பகுதியை சேர்ந்த மாரியப்பன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
வீரசிகாமணி கிராமத்தில் உள்ள புரோட்டா கடை மற்றும் கட்டிடம் ஆக்கிரமிப்பில் உள்ளதாக வருவாய்த்துறையினர் தெரிவித்து உள்ளனர். அந்த ஆக்கிரமிப்பை அகற்றுவது தொடர்பாக உரிய ஆலோசனை வழங்கும்படியும், அதன்பின் உரிய நடவடிக்கை எடுக்கும்படியும் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் மனு அளித்தேன் ஆனால் எனது மனுவின் அடிப்படையில் என்னுடைய கோரிக்கை குறித்து அதிகாரிகள் எந்த பதிலும் அளிக்கவில்லை.
ஆக்கிரமிப்பு அகற்றுவது சம்பந்தமான எனது மனுவை அதிகாரிகள் தள்ளுபடி செய்யாமல், அதை பரிசீலனை செய்யுமாறு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
அரசு நிலம் ஆக்கிரமிப்பு
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ். எஸ்.சுந்தர், பரத சக்கரவர்த்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, மனுதாரர் அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து உள்ளார். அந்த ஆக்கிரமிப்பை அகற்றும் நடவடிக்கைகளில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதை தடுக்கும் வகையில் மனுதாரர் இந்த வழக்கை தொடர்ந்து உள்ளார் என்று வாதாடினார்.
அபராத தொகையில் புத்தகம்
விசாரணை முடிவில், அரசுக்கு சொந்தமான நிலத்தை மனுதாரர் ஆக்கிரமித்து இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. உண்மை தகவலை மறைத்து இந்த வழக்கை அவர் தாக்கல் செய்து உள்ளார். மனுதாரரே தாமாக முன் வந்து அரசு நிலத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும். மனுதாரருக்கு ரூ.5 ஆயிரம் அபதாரம் விதிக்கப்படுகிறது. இந்தத் தொகையை மதுரையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்திற்கு புத்தகங்கள் வாங்குவதற்காக பயன்படுத்த வேண்டும். கலைஞர் நூலகத்திற்கு புத்தகங்கள் வாங்கும் வகையில் தனி வங்கி கணக்கை மதுரை ஐகோர்ட்டு பதிவாளர் தொடங்க வேண்டும், என்று நீதிபதிகள் உத்தரவிட்டு, இந்த வழக்கை தள்ளுபடி செய்தனர்.
விசாரிக்கப்படும் வழக்குகளில் அபராதம் விதிக்கும்போது, அதனை கலைஞர் நூலகத்துக்கு புத்தகங்கள் வாங்குவதற்கு பயன்படுத்த வேண்டும் என நீதிபதிகள் உத்தரவில் கூறி இருந்தால், சம்பந்தபட்டவர்கள் மேற்கண்ட வங்கிக்கணக்கில் அபராதத்தை செலுத்தும் வகையில் இந்த ஏற்பாட்டை நீதிபதிகள் செய்துள்ளனர்.