டெங்கு காய்ச்சல் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனி வார்டு


டெங்கு காய்ச்சல் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனி வார்டு
x
தினத்தந்தி 21 Sep 2023 7:45 PM GMT (Updated: 21 Sep 2023 7:45 PM GMT)

பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சல் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனி வார்டு அமைக்கப்பட்டு உள்ளதாக கண்காணிப்பாளர் டாக்டர் ராஜா தெரிவித்தார்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சல் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனி வார்டு அமைக்கப்பட்டு உள்ளதாக கண்காணிப்பாளர் டாக்டர் ராஜா தெரிவித்தார்.

தனி வார்டு

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு எதிர்பார்த்தப்படி பெய்யவில்லை. மேலும் காலநிலை மாற்றத்தால் பொதுமக்களுக்கு சளி, காய்ச்சல் தொந்தரவு அதிகமாகி உள்ளது. இதற்கிடையில் டெங்கு காய்ச்சல் பரவலும் அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சல் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனி வார்டு அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் தனி வார்டில் செய்யப்பட்டு உள்ள ஏற்பாடுகள் குறித்து ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் டாக்டர் ராஜா ஆய்வு செய்தார். அப்போது மருத்துவ இருப்பிட அலுவலர் டாக்டர் சரவண பிரகாஷ், டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் உடனிருந்தனர்.

உள்நோயாளிகள்

இதுகுறித்து கண்காணிப்பாளர் டாக்டர் ராஜா கூறியதாவது:-

பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு சராசரியாக தினமும் 50 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு வருகின்றனர். இது தவிர காய்ச்சலால் பாதிக்கப்பட்டு குழந்தைகள் 11 பேரும், பெரியவர்கள் 25 பேரும் சேர்த்து 36 பேர் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனி வார்டு அமைக்கப்பட்டு உள்ளது.

இங்கு டாக்டர்கள் வனராஜா, ஹரிபிரசாத் மற்றும் செவிலியர் கண்காணிப்பாளர், 2 செவிலியர்கள் கொண்ட மருத்துவ குழுவினர் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. டெங்கு பாதித்து அனுமதிக்கப்பட்ட ஒருவர் குணமாகி வீடு திரும்பி உள்ளார். தற்போது பாதிக்கப்பட்ட நபர்கள் யாரும் இல்லை.

2 முறை பரிசோதனை

வைரஸ் காய்ச்சல் பாதிப்பு இருந்தால் ரத்த மாதிரி சேகரித்து பரிசோதனை செய்யப்படுகிறது. இதில் தட்டை அணுக்கள் குறையும் நபர்களுக்கு ஒரு நாளைக்கு 2 முறை பரிசோதனை செய்யப்படுகிறது.

டெங்கு வார்டில் உள்ள ஒவ்வொரு படுக்கைக்கும் கொசு வலை அமைக்கப்பட்டு உள்ளது. அரிசி கஞ்சி, உப்பு, சர்க்கரை திரவம், கொதிக்க வைக்கப்பட்ட தண்ணீர் ஆகியவை வழங்கப்படுகிறது. மேலும் 38 படுக்கைகள் பெரியவர்களுக்கும், குழந்தைகளுக்கு 15 படுக்கைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story