பள்ளிக்கூட வாசலை அடைத்து கட்டப்படும் கழிவுநீர் கால்வாய்
மேலூர் அருகே பள்ளிக்கூட வாசலை அடைத்து கழிவுநீர் கால்வாய் கட்டுப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டம் நடத்தினார்கள்.
மேலூர்,
மேலூர் அருகே பள்ளிக்கூட வாசலை அடைத்து கழிவுநீர் கால்வாய் கட்டுப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டம் நடத்தினார்கள்.
வழியை மறித்து கழிவுநீர் கால்வாய்
மதுரை மாவட்டம் மேலூர் அருகே திருப்பத்தூர் ரோட்டில் நாவினிப்பட்டி உள்ளது. இங்கு சாலை அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இதனால் ரோட்டோரம் இருந்த ஆக்கிரமிப்புகள் மற்றும் மரங்கள் அகற்றப்பட்டன. ரோட்டின் இருபுறமும் மழைநீர், கழிவுநீர் செல்லும் கால்வாய் கட்டப்படுகிறது. அங்கு சாலையோரம் உள்ள ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளி முன்பு உயரமான கான்கிரீட் சுவர் எழுப்பி கால்வாய் கட்டப்பட்டு வருகிறது.
இதனால் இந்த பள்ளிக்கூடத்து மாணவ-மாணவிகள் உயரமான கான்கிரீட் கால்வாய் மீது ஏறி, பள்ளிக்கூட வாசலுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. அவ்வாறு செல்லும் போது மாணவ-மாணவிகள் கீழே விழுந்து காயமும் அடைந்ததாக கூறப்படுகிறது.
கிராம மக்கள் முற்றுகை
இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் நாவினிப்பட்டி ஊராட்சி மற்றும் அரசு அதிகாரிகளை கண்டித்து அந்த பள்ளி முன் முற்றுகையிட்டு கோஷமிட்டனர்.
இந்த போராட்டம் குறித்து தகவல் அறிந்ததும் அரசு அதிகாரிகள் விரைந்து வந்து பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, பள்ளிக்கு மாணவ-மாணவிகள் செல்ல பாதை அமைத்து தர வேண்டும் என வலியுறுத்தினர்.
இது குறித்து நெடுஞ்சாலைத்துறையினருக்கு தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து முற்றுகை போராட்டம் நடத்தியவர்கள் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.