கொட்டகையில் இயங்கும் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம்
திருவெண்ணெய்நல்லூரில் கொட்டகையில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் இயங்கி வருகிறது. இங்கு போதிய கட்டிட வசதி இல்லாததால் நெல்மூட்டைகள் சாலையில் அடிக்கி வைக்க வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது.
திருவெண்ணெய்நல்லூரில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் கடந்த 1965-ம் ஆண்டு முதல் திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் இயங்கி வருகிறது. திருவெண்ணெய்நல்லூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தங்களது விளை பொருட்களை இந்த விற்பனைக்கூடத்துக்கு கொண்டு வந்து விற்பனை செய்து செல்கின்றனர்.
ஆனால் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ஒரு கொட்டகை மட்டும் தான் உள்ளது. போதிய கட்டிட வசதி இல்லாததால் விவசாயிகள் கொண்டு வரும் நெல் மூட்டைகளை பாதுகாப்பாக விற்பனைக்கூடத்தில் வைக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது.
பாதுகாப்பு இல்லை
இது குறித்து பலமுறை விவசாயிகள் புகார் அளித்தும் அதிகாரிகள் அதனை அலட்சியப்படுத்தி வருகின்றனர்.
தற்போது திருவெண்ணெய்நல்லூர் பகுதியில் நெல் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதால் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல்மூட்டைகளை விற்பனைக்காக விவசாயிகள் விற்பனைக்கூடத்துக்கு கொண்டு செல்கின்றனர். ஆனால் அங்கு கட்டிட வசதி இல்லாததால், வேறு வழியின்றி விவசாயிகள் தங்களது நெல்மூட்டைகளை திருவெண்ணெய்நல்லூர் மாட வீதியில் வெட்ட வெளியில் அடிக்கி வைத்து வருகின்றனர். மேலும் சாலையோரத்தில் நெற்களை குவித்தும் வைத்துள்ளனர். இதனால் நெல் மூட்டைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது.
கூடுதல் கட்டிட வசதி
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், திருவெண்ணெய்நல்லூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் உள்ள கொட்டகையில் சுமார் ஆயிரம் நெல்மூட்டைகளைதான் வைக்க முடியும். ஆனால் தற்போது ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல்மூட்டைகள் விற்பனைக்காக வருகிறது. இதனால் நெல் மூட்டைகள் அனைத்தையும் பாதுகாப்பாக ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் வைக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
கூடுதல் கட்டிட வசதி கேட்டு நாங்கள் பல முறை மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்தோம். இருப்பினும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் நாங்கள் எங்கள் நெல்மூட்டைகளை சாலையோரத்தில் குவித்து வைத்து வருகிறோம். சில நேரங்களில் எங்களது நெல்லை கால்நடைகள் சேதப்படுத்தி வருகிறது. நெல்மூட்டைகளுக்கு உரிய பாதுகாப்பு இல்லாததால் நெல் மூட்டைகளை அதிகாரிகள் கொள்முதல் செய்யும் வரை அதன் அருகிலேயே நிற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது. அவசர தேவைக்கு கூட அங்கிருந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது.
மழையில் நனைந்து வீணாகும் நெல்மூட்டைகள்
இருப்பினும் இரவு நேரங்களில் மர்மநபர்கள் எங்களின் நெல் மூட்டைகளை திருடி செல்லும் சம்பவங்களும் நடைபெற்று வருகிறது. இது தவிர திடீரென மழை பெய்தால் நெல் மூட்டைகள் அனைத்தும் நனைந்து வீணாகி வருகிறது. இதனால் எங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. இந்த ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தை விட்டால் நாங்கள் பண்ருட்டி, திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்துக்குதான் செல்ல வேண்டும்.
ஆனால் இந்த விற்பனைக்கூடங்கள் மிக தொலைவில் இருப்பதால் எங்களுக்கு கூடுதல் செலவு ஏற்படுவதால் பெரும் வருமான இழப்பு ஏற்படுகிறது. இது தவிர ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட எந்தவொரு அடிப்படை வசதியும் இல்லை. அரும்பாடு பட்டு நெல்மூட்டைகளை நாங்கள் சாகுபடி செய்கிறோம்.
நடவடிக்கை
ஆனால் அதனை விற்பனை செய்ய மேலும் நாங்கள் அரும்பாடு பட வேண்டிய நிலை உள்ளது. இதனால் சில நேரங்களில் இந்த தொழிலை விட்டு விட்டு வேறு தொழில் செய்யலாமா என்கிற எண்ணம் எங்களுக்கு தோன்றுகிறது. எனவே இனியும் காலம் தாழ்த்தாமல் திருவெண்ணெய்நல்லூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் அனைத்து வசதிகளும் கூடுதல் கட்டிட வசதி செய்து கொடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.