மதுக்கடையை அகற்றக்கோரி முற்றுைக போராட்டம்
பந்தநல்லூர் அருகே மதுக்கடையை அகற்றக்கோரி முற்றுைக போராட்டம் நடந்தது. இதில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனா்.
திருப்பனந்தாள்;
பந்தநல்லூர் அருகே மதுக்கடையை அகற்றக்கோரி முற்றுைக போராட்டம் நடந்தது. இதில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனா்.
அரசு மதுக்கடை
தஞ்சை மாவட்டம் பந்தநல்லூர் அருகே காமாட்சிபுரத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள மதுக்கடையை அகற்றக்கோரி பல்வேறு கிராமங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் முற்றுகை போராட்டம் நடத்தி மதுக்கடையை மூட முயன்றனர்.பந்தநல்லூரிலிருந்து காமாட்சிபுரம், வேட்டமங்கலம், குலசேகரநல்லூர், தட்சிணாம்பள்ளம், கோனுளாம்பள்ளம், திட்டச்சேரி, மரத்துறை, மதகுசாலை, கருப்பூர், நெய்குப்பை, சோழியவிளாகம், சாய்னாபுரம், திருமங்கைச்சேரி, முள்ளங்குடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு செல்லும் பிரதான சாலையின் அருகே அரசு மதுக்கடை செயல்பட்டு வருகிறது.
மூட முயற்சி
இப்பகுதியில் மதுப்பிரியர்கள் மது அருந்திவிட்டு பள்ளி, கல்லூரி செல்லும் மாணவிகளுக்கு இடையூறு செய்வது, மற்றும் பொது மக்களுக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்படுத்துவதாக கிராம மக்கள் புகார் தெரிவித்து வந்தனர்.இந்தநிலையில் நேற்று மதியம் 12மணி அளவில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள அரசு மதுக்கடையை அகற்றக்கோரி உழவர் பேரியக்க மாநில தலைவர் ஆலயமணி தலைமையில் பல்வேறு கிராமங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட பெண்கள் முற்றுகை போராட்டம் நடத்தி மதுக்கடையை மூட முயன்றனர்.
அமைதி பேச்சுவாா்த்தை
பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், திரளான இளைஞர்கள், பெண்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என இணைந்து ஊர்வலமாக சென்று மதுக்கடையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.இதனால் டாஸ்மாக் ஊழியர்கள் கடையை மூடினர். அப்போது போராட்டக்காரர்கள் கடையை முற்றிலுமாக அகற்றக்கோரி மதுக்கடை முன்பு தரையில் அமர்ந்து கோஷம் எழுப்பினர்.இதனால் சம்பவ இடத்தில் பந்தநல்லூர் போலீசார் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதை ஏற்காத போராட்டகாரர்கள் காமாட்சிபுரம் பந்தநல்லூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதி போர்க்களம் போல் காட்சி அளித்தது. இதைத்தொடர்ந்து போலீசார் கும்பகோணம் உதவி கலெக்டர் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தனர். இதன்பின் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.