உதவி கலெக்டர் அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டம்
சங்ககிரி:-
சங்ககிரி ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் கடந்த 2006-ம் ஆண்டு விவசாய நிலத்தை விலைக்கு வாங்கி 30 குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா பிரித்து வழங்கப்பட்டது. இந்த வீட்டுமனைக்கு செல்லும் வழிப்பாதையை சிலர் ஆக்கிரமிப்பு செய்து அந்த வழியாக மக்கள் செல்ல முடியாதபடி தடுத்து வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதியை சேர்ந்த 30 குடும்பத்தினர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினருடன் நேற்று சங்ககிரி உதவி கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு சென்ற சங்ககிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவி போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் உடன்பாடு ஏற்படவில்லை.
இதனை தொடர்ந்து சங்ககிரி ஆதிதிராவிட நலத்துறை தனி தாசில்தார் லெனின் தலைமையில் பேச்சுவார்த்தை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் வழிபாதை சம்பந்தமாக கோர்ட்டில் வழக்கு உள்ளது. வழக்கு முடிந்தவுடன் பாதை வசதி செய்து தரப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.