துர்நாற்றம் வீசும் குளத்தை தூர்வார வேண்டும்


துர்நாற்றம் வீசும் குளத்தை தூர்வார வேண்டும்
x

துர்நாற்றம் வீசும் குளத்தை தூர்வார வேண்டும்

திருவாரூர்

கூத்தாநல்லூர் அருகே துர்நாற்றம் வீசும் குளத்தை தூர்வார வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செத்தகுளம்

கூத்தாநல்லூர் அருகே சேகரை மாரியம்மன் கோவில் அருகில் செத்தகுளம் உள்ளது. இந்த குளத்தை 20 ஆண்டுகளுக்கு முன்பு அந்த பகுதி கிராம மக்கள் குளிப்பதற்கும், ஆடைகள் துவைப்பதற்கும் பயன்படுத்தி வந்தனர். இந்த குளத்திற்கு வெண்ணாற்றில் இருந்து தண்ணீர் வருவதற்கும், தேவையற்ற தண்ணீரை வெளியேற்றுவதற்கும் வாய்க்கால் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தது.

நாளடைவில் வாய்க்கால் முறையாக தூர்வாரப்படாமல் ஆக்கிரமிப்புகளால் சூழப்பட்டதால் செத்தகுளத்திற்கு ஆற்றில் இருந்து தண்ணீர் செல்வது தடைப்பட்டு போனது.

கடந்த 20 ஆண்டுகளாக குளத்தில் தேங்கி நின்ற தண்ணீர் வெளியேற வழியில்லாமல் அப்படியே தேங்கி நிற்கிறது. மேலும் தண்ணீரே வற்றாத குளமாக திகழ்கிறது.

துர்நாற்றம் வீசுகிறது

ஆனால் துர்நாற்றம் வீசும் தண்ணீராய் தேங்கி நிற்கிறது. குளத்தை சுற்றிலும் வீடுகள் மற்றும் வழிபாட்டு தலங்கள், அரசு பள்ளி, அங்கன்வாடி பள்ளி, ரேஷன் கடை உள்ளிட்டவை உள்ளது. பல ஆண்டுகளாக துர்நாற்றம் வீசும் தண்ணீர் தேங்கி நிற்பது ஒரு புறம் இருந்தாலும், தினமும் கழிவு நீரும் சேர்ந்து குளத்தை சாக்கடை குளமாக ஆக்கிவிட்டது.

இதனால் செத்தகுளம் சுகாதாரகேடு விளைவிக்கும் குளமாக காணப்படுகிறது. குளம் முழுவதும் ஆகாய தாமரை மற்றும் கோரை நார்கள் சூழ்ந்து, குளம் இருக்கும் இடமே தெரியாத அளவிற்கு காணப்படுகிறது. மேலும் சுத்தமான தண்ணீரை தேக்கி வைக்க முடியாத குளமாக பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.

தூர்வார வேண்டும்

இதனால் கொசு உற்பத்தி அதிகரித்து சுகாதார கேடு மற்றும் தொற்று நோய் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் துர்நாற்றம் வீசும் செத்தகுளம் மற்றும் தண்ணீர் சென்று வரக்கூடிய வாய்க்கால் ஆகியவற்றை தூர்வாரி மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அந்த பகுதி கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


Related Tags :
Next Story