ஜவுளி வியாபாரி வீட்டுக்குள் புகுந்த பாம்பு
போடியில் ஜவுளி வியாாபாரி வீட்டுக்குள் புகுந்த பாம்பை தீயணைப்பு படையினர் பிடித்தனர்.
போடி அருகே உள்ள ரெங்கநாதபுரத்தை சேர்ந்தவர் மன்னவன். ஜவுளி வியாபாரி. இவருடைய வீட்டுக்குள் நேற்று காலை பாம்பு ஒன்று புகுந்தது. இதை பார்த்த அவர் உடனே போடி தீயணைப்புநிலையத்திற்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் நிலைய அலுவலர் சக்திவேல் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் அங்கு வந்து சுமார் அரை மணி நேரம் போராடி 5 அடி நீளமுள்ள கட்டுவிரியன் பாம்பை பிடித்தனர்.
இதேபோல் போடி ஆதிபராசக்தி கோவில் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது வீட்டில் நேற்று மாலை பாம்பு ஒன்று புகுந்தது. இதுகுறித்து போடி தீயணைப்பு நிலையத்திற்கு அவர் தகவல் கொடுத்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போடி தீயணைப்பு நிலைய அலுவலர் சக்திவேல் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சுமார் அரை மணி நேரம் போராடி 7 அடி நீளமுள்ள சாரை பாம்பு ஒன்றை பிடித்தனர். பின்னர் பிடிப்பட்ட பாம்புகளை வனப்பகுதியில் கொண்டு போய் விட்டனர்.