பால் வியாபாரி வீட்டில் 28 முட்டைகள் இட்டு அடைகாத்த பாம்பு


பால் வியாபாரி வீட்டில் 28 முட்டைகள் இட்டு அடைகாத்த பாம்பு
x
தினத்தந்தி 25 Jun 2023 12:15 AM IST (Updated: 25 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் முதுநகரில் பால் வியாபாரி வீட்டில் பாம்பு ஒன்று 28 முட்டைகள் இட்டு அடைகாத்தது. அதனை பிடித்த போது பெண் ஒருவர் சாமி வந்து ஆடியதால் பரபரப்பு ஏற்பட்டது

கடலூர்

கடலூர்

அடைகாத்த பாம்பு

கடலூர் முதுநகர் சோனகர் தெருவை சேர்ந்தவர் ஷேக் (வயது 48), பால் வியாபாரி. இவர் வளர்த்து வரும் பூனை நேற்று நீண்ட நேரமாக சத்தமிட்டுக் கொண்டிருந்தது. இதனால் சந்தேகமடைந்த ஷேக், தனது வீட்டு வளாகத்தில் சுற்றி பார்த்தார். அப்போது அங்கு பாம்பு ஒன்று கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், உடனே பாம்பு பிடி வீரருக்கு தகவல் தெரிவித்தார்.

அதன் பேரில் பாம்பு பிடி வீரர் செல்லா விரைந்து வந்தார். பின்னர் ஷேக் வீட்டின் வளாகத்தில் பதுங்கி இருந்த பாம்பை லாவகமாக பிடித்தார். பிடிபட்டது சுமார் 4½ அடி நீளமுடைய நல்ல பாம்பு என்பது தெரியவந்தது. அப்போது பாம்பின் அருகில் 28 முட்டைகள் கிடந்தன. அந்த பாம்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு முட்டையிட்டு, அதனை அடைகாத்து வந்தது தெரியவந்தது.

சாமி ஆடிய பெண்

பின்னர் அவர், அந்த பாம்பை பிளாஸ்டிக் டப்பாவில் அடைத்தார். இதற்கிடையே பாம்பு பிடிபட்டது பற்றி அறிந்த அப்பகுதி மக்கள், அதனை பார்க்க திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் பாம்பு முட்டைகளையும், பாம்பையும் பார்த்து சென்றனர். அப்போது அப்பகுதியில் வீட்டு வேலையில் ஈடுபட்டிருந்த பெண் ஒருவரும் வந்திருந்தார். அவர் பாம்பை பார்த்ததும், திடீரென சாமி வந்து ஆடினார்.

உடனே அங்கிருந்த சக பெண்கள், அவரை அழைத்து சென்றனர். பின்னர் பிடிபட்ட பாம்பு வனப்பகுதிக்கு கொண்டு சென்று விடப்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story