வாய்க்கால் ஆக்கிரமிப்பு அகற்றப்படாததை கண்டித்துஎருமை மாட்டிடம் மனு அளிக்கும் போராட்டம் நடத்திய சமூகஆர்வலர்வளவனூரில் பரபரப்பு


வாய்க்கால் ஆக்கிரமிப்பு அகற்றப்படாததை கண்டித்துஎருமை மாட்டிடம் மனு அளிக்கும் போராட்டம் நடத்திய சமூகஆர்வலர்வளவனூரில் பரபரப்பு
x
தினத்தந்தி 6 Oct 2023 12:15 AM IST (Updated: 6 Oct 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

வளவனூரில் வாய்க்கால் ஆக்கிரமிப்பு அகற்றப்படாததை கண்டித்து சமூகஆர்வலர் ஒருவர் எருமை மாட்டிடம் மனு அளித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம்


வளவனூர் அருகே உள்ள சாலையாம்பாளையம் கிராமத்தில் 423 ஏக்கர் பரப்பளவில் ஏரி உள்ளது. மழைக்காலங்களில் இந்த ஏரிக்கு வரும் தண்ணீர் மூலம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வந்தது. இந்த ஏரிக்கு செல்லும் நீர்வரத்து வாய்க்கால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் ஏரிக்கு தண்ணீர் வரத்து தடைபட்டுள்ளதால் பல மாதங்களாக ஏரி, தண்ணீரின்றி வறண்டு காணப்படுகிறது. எனவே இந்த ஏரியின் நீர்வரத்து வாய்க்கால் ஆக்கிரமிப்பை அகற்றி தூர்வாரக்கோரி அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலரான பிரகாஷ் என்பவர் விழுப்புரம் தாலுகா அலுவலகத்தில் பலமுறை கோரிக்கை மனு கொடுத்துள்ளார். இருப்பினும் இதுநாள் வரையிலும் ஏரி நீர்வரத்து வாய்க்கால் ஆக்கிரமிப்பு அகற்றப்படவில்லை. இந்நிலையில் ஏரி நீர்வரத்து வாய்க்கால் ஆக்கிரமிப்பை அகற்றாத அதிகாரிகளை கண்டித்து நேற்று சமூக ஆர்வலர் பிரகாஷ், வளவனூர் பஸ் நிறுத்தத்தில் எருமை மாட்டுக்கு மாலை அணிவித்து, ஏரி வாய்க்காலை தூர்வாரக்கோரி எருமை மாட்டிடம் மனு அளிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டார். மேலும் ஏரி வாய்க்கால் தூர்வாரப்படாததால் தண்ணீரின்றி விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதோடு கால்நடைகளும் பாதிக்கப்பட்டுள்ளன, நிலத்தடி நீர்மட்டம் 120 அடியிலிருந்து 180 அடிக்கு சென்றுவிட்டதாகவும் அவர் வேதனையுடன் தெரிவித்தார். இதையறிந்ததும் வளவனூர் போலீசார் அங்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பிரகாசிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி அவரை அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.


Next Story