சமூக சேவகர், தொண்டு நிறுவனத்திற்கான விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
சமூக சேவகர், தொண்டு நிறுவனத்திற்கான விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.
தமிழக அரசால் பெண்களின் முன்னேற்றத்திற்கு, சிறந்த சேவை புரிந்த சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனத்திற்கான விருதுகள், சுதந்திர தின விழாவில் தமிழக முதல்-அமைச்சரால் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது. சிறந்த சமூக சேவகருக்கு 10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம் மற்றும் சான்று வழங்கப்படுகின்றன. சிறந்த நிறுவனத்திற்கு ரூ.50 ஆயிரம் ரொக்கப் பரிசுடன், 10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம் மற்றும் சான்று வழங்கப்படுகிறது. 2023-ம் ஆண்டிற்கான பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனத்திற்கான விருதுகள் வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விருதுக்கான விண்ணப்ப விவரங்கள் அனைத்தும் தமிழக அரசின் விருதுகள் இணையதளத்தில் (https://awards.tn.gov.in) ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க 10-ந் தேதி கடைசி நாள் ஆகும். விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்த பின், பயோடேட்டா, சுயசரிதை, பாஸ்போட் அளவு போட்டோ-2, சிறந்த சமூக சேவைக்காக இதுவரை பெற்ற விருதுகளின் விவரங்கள் மற்றும் சான்றுகளுடன் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், 4- வது தளம் சி பிளாக்கிலுள்ள மாவட்ட சமூகநல அலுவலகத்தில் 13-ந் தேதிக்குள் நேரில் சமர்ப்பிக்கலாம்.
இந்த தகவலை கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.