கள்ளக்குறிச்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்
கள்ளக்குறிச்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமையில் நடைபெற்றது
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியநாராயணன் முன்னிலை வகித்தார். மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கி மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். அதில் திருக்கோவிலூர் தாலுகா மேலூர் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவர், தனது மகள் விக்னேஷ்வரி (வயது 6) மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டு உள்ளார். எனவே சிறப்பு சக்கர நாற்காலி வழங்க வேண்டும் என கோரிக்கை மனு கொடுத்தார். அந்த மனுவை பரிசீலனை செய்த கலெக்டர் ஷ்ரவன்குமார் உடனடியாக அந்த சிறுமிக்கு மாவட்ட மாற்றுத்திறனாளி நலத்துறையின் மூலம் ரூ.11 ஆயிரம் மதிப்புள்ள சிறப்பு சக்கர நாற்காலியை வழங்கினார். மேலும் 3 சக்கர சைக்கிள், அடையாள அட்டை, உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான 99 மனுக்களை மாற்றுத்திறனாளிகள் அளித்தனர். இதில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சுப்பிரமணி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.