விண்ணப்பங்களை பதிவு செய்யும் சிறப்பு முகாம் தொடங்கியது
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ், மாதந்தோறும் ரூ.1,000 பெறுவதற்கான விண்ணப்பங்களை பதிவு செய்யும் சிறப்பு முகாம் தொடங்கியது. சர்வர் கோளாறு ஏற்பட்டதால் தாமதம் ஏற்பட்டது.
கிணத்துக்கடவு,
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ், மாதந்தோறும் ரூ.1,000 பெறுவதற்கான விண்ணப்பங்களை பதிவு செய்யும் சிறப்பு முகாம் தொடங்கியது. சர்வர் கோளாறு ஏற்பட்டதால் தாமதம் ஏற்பட்டது.
விண்ணப்பம் பதிவு
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதற்காக பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, வால்பாறை, ஆனைமலை உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு கடந்த 20-ந் தேதி முதல் ரேஷன் கடை ஊழியர்கள் மூலம் வீடு, வீடாக சென்று விண்ணப்பம் வழங்கப்பட்டது. இந்தநிலையில் நேற்று முதல் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவு செய்யும் சிறப்பு முகாம் தொடங்கியது.
கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்தில் அந்தந்த பகுதியில் உள்ள கிராம சேவை மையம், நூலகம், இ-சேவை மையம், சமுதாயக்கூடம் என மொத்தம் 92 இடங்களில் சிறப்பு முகாம் நடந்தது. முகாம்களில் காலை முதல் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்களை பெண்கள் நிரப்பி முகாம் அலுவலர்களிடம் வழங்கினர். பின்னர் விண்ணப்பதாரர்களின் ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் உள்ளிட்ட ஆவணங்களை ஊழியர்கள் சரிபார்த்து விண்ணப்பத்தை ஆன்லைனில் பதிவேற்றம் செய்தனர்.
சர்வர் கோளாறு
பல பகுதிகளில் சர்வர் கோளாறு(இணையதள பிரச்சினை) ஏற்பட்டது. இதனால் சர்வர் சரியான பின்னர் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டது. மழையை பொருட்படுத்தாமல் பெண்கள் தங்களது விண்ணப்பங்களை அந்தந்த முகாம்களுக்கு சென்று பதிவு செய்தனர். விண்ணப்பங்கள் பதிவு செய்யும் பணியை கிணத்துக்கடவு தாலுகா கண்காணிப்பு அலுவலர் (கோட்ட கலால் அலுவலர்) துரைமுருகன், கிணத்துக்கடவு தாசில்தார் சிவக்குமார், கிணத்துக்கடவு மண்டல தாசில்தார் முத்து மற்றும் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் பார்வையிட்டனர்.
வால்பாறை தாலுகாவில் 10 இடங்களில் சிறப்பு முகாம் நடைபெற்றது. கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் அனைத்து எஸ்டேட் பகுதியை சேர்ந்த பெண்கள் முகாமிற்கு வந்து விண்ணப்பங்களை பதிவு செய்தனர். வால்பாறை தாலுகா பகுதியின் தாலுகா கண்காணிப்பு அதிகாரியும், கோவை மாவட்ட ஆய்வுக்குழு அதிகாரியுமான சாந்தி தலைமையில் தாசில்தார் அருள்முருகன் முகாமை பார்வையிட்டனர். இதற்கிடையே சில இடங்களில் சர்வர் கோளாறு காரணமாக, விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவு செய்வதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் பெண்கள் நீண்ட நேரம் காத்திருந்தனர். பின்னர் மாற்று ஏற்பாடு செய்யப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
சிறப்பு முகாம்
இதேபோல் ஆனைமலை தாலுகாவில் 69 இடங்களில் சிறப்பு முகாம் நடந்தது. முகாமில் சர்வர் கோளாறு காரணமாக விண்ணப்பங்களை நேரடியாக இணையதளத்தில் பதிவு செய்ய முடியவில்லை. இதனால் விண்ணப்பதாரர்கள் குறித்த விவரங்களை தனியாக எழுதி வைத்து, பின்னர் ஆன்லைனில் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.