குடிநீர் பிரச்சினை குறித்து ஆய்வு செய்ய தனிக்குழு அமைக்கப்படும்
மாநகராட்சி கூட்டத்தில் தி.மு.க.- அ.தி.மு.க. கவுன்சிலர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். குடிநீர் பிரச்சினை குறித்து ஆய்வு செய்ய தனிக்குழு அமைக்கப்படும் என்று மேயர் ராமச்சந்திரன் கூறினார்.
மாநகராட்சி கூட்டத்தில் தி.மு.க.- அ.தி.மு.க. கவுன்சிலர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். குடிநீர் பிரச்சினை குறித்து ஆய்வு செய்ய தனிக்குழு அமைக்கப்படும் என்று மேயர் ராமச்சந்திரன் கூறினார்.
மாநகராட்சி கூட்டம்
சேலம் மாநகராட்சி கூட்டம் நேற்று கூட்ட அரங்கில் நடந்தது. மேயர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். ஆணையாளர் கிறிஸ்துராஜ், துணை மேயர் சாரதாதேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் யாதவமூர்த்தி பேசும் போது, மாநகராட்சியில் பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட பலருக்கு 2 மாதமாக சம்பளம் வழங்கப்படவில்லை. மேலும் மாநகராட்சியில் பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும். அப்போதுதான் எந்த நிதியில் இருந்து எந்த பணிக்கு எவ்வளவு நிதி ஒதுக்கலாம் என்பது தெரிய வரும் என்றார்.
மேலும் அவர் பேசுகையில், நங்கவள்ளி, மேட்டூர் தொட்டில்பட்டி தனிக்குடிநீர் திட்டம் ஆகிய 2 குடிநீர் திட்டங்களுக்கு மொத்த செலவு தொகை ரூ.693.49 கோடியில்,மாநகராட்சியின் பங்கு ரூ.416 கோடி என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த தொகை மாநகராட்சி பொது நிதியில் இருந்து வழங்கப்படுகிறதா? என்று கேள்வி எழுப்பினார். மேலும் கொண்டலாம்பட்டி, அம்மாபேட்டை பகுதிகளில் 15 நாட்களுக்கு ஒருமுறை தான் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இதனால் அங்குள்ள பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
குடிநீர் பிரச்சினை
அதற்கு பதில் அளித்து என்ஜினீயர் ரவி பேசும் போது, தனிக்குடிநீர் திட்டத்திற்கு மாநகராட்சியில் இருந்து எந்த நிதியும் எடுக்கப்படுவது இல்லை. அரசு மானியம் மற்றும் பொதுமக்கள் பங்களிப்போடுதான் செயல்படுத்தப்படும் என்றார்.
அப்போது அ.தி.மு.க. கொறடா செல்வராஜ் எழுந்து மாநகரில் பல இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. அதற்கு காரணம் பல இடங்களில் பெரிய ஓட்டல்களில் கழிவறைக்கு கூட காவிரி நீர்தான் பயன்படுத்தப்படுகிறது. இது குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை. கடந்த 1½ ஆண்டுகளில் மாநகரில் குடிநீர் பிரச்சினை ஏற்பட்டு உள்ளது என்றார்.
கடும் வாக்குவாதம்
அப்போது தி.மு.க. உறுப்பினர்கள் சாந்தமூர்த்தி உள்பட பலர் எழுந்து கடந்த 10 வருடமாக அ.தி.மு.க. ஆட்சியில் ஏன் குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தவில்லை என்று கேள்வி எழுப்பினர். இதனால் தி.மு.க., அ.தி.மு.க. உறுப்பினர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது மாநகராட்சி ஆளும் கட்சி தலைவர் ஜெயக்குமார் எழுந்து குடிநீர் பிரச்சினை பற்றி ஆய்வு நடத்தப்படும் என்று கூட்டத்தில் கூறப்பட்டு உள்ளது. எனவே உறுப்பினர்கள் கூச்சலிடாமல் அமருங்கள் என்று கூறினார். அதன்பிறகு கவுன்சிலர்கள் சமாதானம் அடைந்து இருக்கைகளில் அமர்ந்தனர்.
குடிநீர் பிரச்சினைக்கு தனிக்குழு
பின்னர் சூரமங்கலம் மண்டலக்குழு தலைவர் கலையமுதன் பேசும் போது, குடிநீர் பிரச்சினை பற்றி அதிகாரிகள் தவறான தகவல்கள் தருகின்றனர். தற்போது மாநகராட்சிக்கு 150 மெட்ரிக் லிட்டர் (எம்.எல்.டி) தண்ணீர் வருகிறது என்று கூறுகிறார்கள். அந்த தண்ணீரை முறையாக வழங்கினாலே மாநகர மக்களுக்கு தினமும் குடிநீர் வினியோகம் செய்யலாம். 2006-ம் ஆண்டு முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி உத்தரவின் பேரில் அப்போதைய அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் தலைமையில் தனிக்குடிநீர் திட்டம் சேலத்தில் தான் முதன் முதலில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டது என்றார்.
அப்போது மேயர் ராமச்சந்திரன் குடிநீர் பிரச்சினை குறித்து தனிக்குழு அமைத்து ஆய்வு நடத்தப்படும். அந்த குழு கொடுக்கும் அறிக்கையின் அடிப்படையில் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படும் என்றார்.
முதல்- அமைச்சருக்கு நன்றி தீர்மானம்
பின்னர் கூட்டத்தில் அஸ்தம்பட்டி மண்டல குழு தலைவர் உமாராணி ஓடை ஆக்கிரமிப்புகளை அகற்ற தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். அதே போன்று உறுப்பினர்கள் பலர் பல்வேறு கோரிக்கைகள் வைத்தனர்.
தொடர்ந்து கூட்டத்தில், ஏழை குழந்தைகளின் பசியை போக்கி, அவர்கள் திறம்பட கல்வி கற்க காலை சிற்றுண்டி திட்டத்தை தொடங்கி சிறப்பாக செயல்படுத்தி வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தல் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.