பேச்சிப்பாறை அருகே அட்டகாசத்தில் ஈடுபட்டு வரும் புலியை பிடிக்க வனத்துறை சிறப்பு படை வருகிறது


பேச்சிப்பாறை அருகே அட்டகாசத்தில் ஈடுபட்டு வரும் புலியை பிடிக்க வனத்துறை சிறப்பு படை வருகிறது
x

பேச்சிப்பாறை அருகே அட்டகாசத்தில் ஈடுபட்டு வரும் புலியை பிடிக்க வனத்துறை சிறப்பு படை வருகிறது.

கன்னியாகுமரி

குலசேகரம்:

பேச்சிப்பாறை அருகே அட்டகாசத்தில் ஈடுபட்டு வரும் புலியை பிடிக்க வனத்துறை சிறப்பு படை வருகிறது.

புலி அட்டகாசம்

குமரி மாவட்டம் பேச்சிப்பாறை அருகே வனப்பகுதியை சூழ்ந்துள்ள சிற்றாறு ரப்பர் கழக தொழிலாளர் குடியிருப்பு, மூக்கறைக்கல், மல்லமுத்தன்கரை, புரையிடம் உள்ளிட்ட பகுதிகளில் புலி புகுந்து கடந்த 2 வாரமாக அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகிறது. அதுவும் இரவு நேரத்தில் தான் அதன் நடமாட்டம் குடியிருப்பு பகுதியில் இருந்துள்ளது.

2 ஆடுகள், ஒரு மாடு, ஒரு நாய் ஆகியவற்றை இந்த புலி வேட்டையாடியிருந்தது. இதுதவிர ஒரு மாட்டையும் கடித்து குதறியது. பின்னர் புலியை பிடிக்க வனத்துறை சார்பில் 2 கூண்டுகள் வைக்கப்பட்டன. ஆனால் அந்த கூண்டுகளிலும் புலி சிக்கவில்லை.

மாற்று முயற்சி

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவில் சிற்றாறு தொழிலாளர் குடியிருப்பில் ஞானசுந்தரம் என்ற தொழிலாளியின் ஆட்டு கொட்டகையில் கட்டப்பட்டிருந்த 4 ஆடுகளை புலி அடித்துக் கொன்றது. 5-வதாக ஒரு ஆடு காயத்துடன் தப்பியது. இந்த சம்பவத்தால் அங்குள்ள மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

மேலும் இதுபற்றி தகவல் அறிந்ததும் களியல் வனச்சரக அலுவலர் முகைதீன் அப்துல்காதர் தலைமையிலான வனத்துறையினர் விரைந்து வந்து இறந்து கிடந்த ஆடுகளை பார்வையிட்டனர். பின்னர் புலியின் கால் தடங்களை சேகரித்தனர். இதனால் அட்டகாசத்தில் ஈடுபடும் புலியை பிடிப்பதில் வனத்துறைக்கு பெரும் சவாலாக உள்ளது. இதனை தொடர்ந்து வனத்துறையினர் புலியை பிடிக்க மாற்று முயற்சிகளை கையில் எடுக்கத் தொடங்கி உள்ளனர்.

சிறப்பு படை விரைகிறது

இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் இளையராஜா கூறியதாவது:-

புலியால் கொல்லப்பட்ட 4 ஆடுகளுக்கும் ரூ.12 ஆயிரம் இழப்பீடு கொடுத்துள்ளோம். தற்போது புலியை பிடிக்கும் அடுத்த கட்ட நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சிற்றாறு மற்றும் மூக்கறைக்கல் பகுதிகளைச் சேர்ந்த சுமார் 15 பேரை வனத்துறைக்கு உதவியாக பயன்படுத்த உள்ளோம். சிற்றாறு பகுதியில் புலியின் வருகை அதிகமாக இருப்பதால் 2 கூண்டுகளும் சிற்றாறு பகுதியில் வைக்கப்படுகிறது. புலி கூண்டுகளும் கொட்டகை போல் மாற்றி வடிவமைக்கப்பட உள்ளது. இதுதவிர சிற்றாறு பகுதியில் அனைத்து வீடுகளிலும் உள்ள கால்நடைகளை மொத்தமாக சேர்த்து பாதுகாப்பாக ஓரிடத்தில் இரவு நேரத்தில் கட்டி வைக்க உள்ளோம். புலி பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காணுமாறு வனத்துறை அமைச்சரும் உத்தரவிட்டுள்ளார். முதுமலையில் இருந்து அனுபவம் வாய்ந்த வன கால்நடை மருத்துவர் டாக்டர் கலைவாணன் இங்கு வரவுள்ளார். மேலும் மதுரையில் இருந்து புலியை பிடிக்கும் பயிற்சி பெற்ற வனத்துறையை சேர்ந்த 'எலைட்' என்ற சிறப்பு படையும் இங்கு வர உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story