இளம்பெண்ணை பிடிக்க தனிப்படை திருவாரூர் விரைந்தது
சமூக வலைத்தளத்தில் ஆயுதங்களுடன் வீடியோ வெளியிட்ட இளம்பெண்ணை பிடிக்க தனிப்படை திருவாரூருக்கு விரைந்தது.
சமூக வலைத்தளத்தில் ஆயுதங்களுடன் வீடியோ வெளியிட்ட இளம்பெண்ணை பிடிக்க தனிப்படை திருவாரூருக்கு விரைந்தது.
இளம்பெண்
விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர் வினோதினி என்ற தமன்னா (வயது 23). நர்சிங் படித்த இவர், கோவை பீளமேடு பகுதியில் தங்கி கஞ்சா விற்பனையில் ஈடுபட்டார். இந்த நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு கஞ்சா விற்றபோது தனது ஆண் நண்பர் சூர்யாவுடன் தமன்னாவை பீளமேடு போலீசார் கைது செய்தனர்.
பின்னர் வெளியே வந்த அவருக்கு ரவுடிகளுடன் தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, கோவையில் கடந்த மாதத்தில் அடுத்தடுத்து 2 கொலைகள் நடந்தன. இது தொடர்பாக நடத்திய விசாரணையில், ரவுடிகளுக்குள் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக கொலை நடந்தது தெரியவந்தது.
வீடியோ வெளியீடு
இந்த நிலையில், சில ரவுடிகளுக்குள் மோதலை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளத்தில் கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் தமன்னா வீடியோ மற்றும் புகைப்படங்களை பதிவேற்றம் செய்தார்.
அது வன்முறையை தூண்டும் வகையில் இருந்ததால் சைபர் கிரைம் மற்றும் ராமநாதபுரம் போலீசார் தமன்னா மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இதனால் அவர் தலைமறைவானார். எனவே அவரை பிடிக்க போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அவர்கள் தமன்னாவை தீவிரமாக தேடி வருகிறார்கள்.
இது குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது:-
திருவாரூர் விரைவு
தலைமறைவாக இருக்கும் தமன்னாவை தேடி திருப்பூர், விருதுநகர் ஆகிய பகுதிகளில் விசாரணை நடத்தப்பட்டது. தற்போது அவர் திருவாரூரில் உள்ள நண்பர் வீட்டில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்து உள்ளது. அதன்பேரில் தனிப்படையினர் தற்போது திருவாரூர் விரைந்து உள்ளனர்.
கடந்த மாதம் வரை அவர் சரவணம்பட்டி பகுதியில் தான் சுற்றி வந்து உள்ளார்.
எனவே அவர் அந்த பகுதியிலும் பதுங்கி உள்ளாரா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவருடைய செல்போன் எண்ணை வைத்து தேடி வருகிறோம்.
தற்போது அவர் தொடர்பாக சில ரகசிய தகவல்கள் கிடைத்து உள்ளன. எனவே விரைவில் அவரை பிடித்து விடுவோம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.