ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக கோவையில் சிறப்பு புலனாய்வு குழு போலீசார் விசாரணை


ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக கோவையில் சிறப்பு புலனாய்வு குழு போலீசார் விசாரணை
x

திருச்சியில் நடந்த ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக கோவையில் சிறப்பு புலனாய்வு குழு போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

கோயம்புத்தூர்


திருச்சியில் நடந்த ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக கோவையில் சிறப்பு புலனாய்வு குழு போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

ராமஜெயம் கொலை வழக்கு

திருச்சியை சேர்ந்த தி.மு.க. அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம். தொழில்அதிபரான இவர் கடந்த 2012-ம் ஆண்டு நடைபயிற்சி சென்றபோது, மர்ம நபர்களால் கடத்தி கொலை செய்யப்பட்டார். ராமஜெயத்தின் கை, கால்கள் கட்டுக்கம்பியால் இணைத்து கட்டப்பட்டு இருந்தது.

இந்த கொலை சம்பவம் குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் கொலையாளிகள் குறித்த எந்தவித துப்பும் கிடைக்கவில்லை. பின்னர் இந்த கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டது. ஆனாலும் வழக்கில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதையடுத்து கடந்த 2017-ம் ஆண்டு இந்த கொலை வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது.

சிறப்புக்குழு அமைப்பு

ஆனால் சி.பி.ஐ. தரப்பில் மேற்கொண்ட விசாரணையிலும் முடிவு தெரியவில்லை. இதையடுத்து மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவின்பேரில் தூத்துக்குடி போலீஸ் சூப்பிரண்டு ஜெயகுமார், அரியலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மதன், சி.பி.ஐ. துணை சூப்பிரண்டு ரவி உள்பட போலீசார் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது.

இதற்கிடையே இந்த வழக்கில் முக்கிய துப்பாக கருதப்படும் கார் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. அந்த கார் யாருடையது என்பது குறித்த தகவல் கிடைக்கவில்லை. எனவே தமிழகம் முழுவதும் அதுபோன்று கார் வைத்து இருப்பவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டது. அதில் 1,720 பேரிடம் அந்த வகையான கார் இருப்பது தெரியவந்தது. எனவே அந்த கார் உரிமையாளர்களிடம் சிறப்பு குழுவை சேர்ந்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோவையில் 250 கார்கள்

இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் 250 பேரிடம் அதே வகையான கார் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து போலீஸ் துணை சூப்பிரண்டு தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவினர் கோவை வந்தனர். பின்னர் அவர்கள் அந்த 250 உரிமையாளர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இது குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது:-

ராமஜெயம் கொலை வழக்கில் முக்கிய துப்பாக கருதப்படும் அதே வகையான கார்களை வைத்து இருப்பவர்கள் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அந்த கார் 2012-ம் ஆண்டுக்கு முன்பு வாங்கப்பட்டது என்றால், சம்பவம் நடந்த நாளில், அந்த காரின் உரிமையாளர்கள் எங்கு இருந்தார்கள்?, அந்த கார்களை உரிமையாளர்கள் தவிர வேறு யாராவது எடுத்துச்சென்றார்களா?, அந்த கார்களை வைத்து இருப்பவர்கள் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

உரிமையாளர்களிடம் விசாரணை

சிறப்பு புலனாய்வு குழுவை சேர்ந்த போலீசார் யாரும் செல்போன் மூலம் விசாரணை நடத்தவில்லை. நேரடியாக அந்த வகையான கார்களை வைத்திருக்கும் உரிமையாளர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள். தற்போது 100-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு உள்ளது. விரைவில் விசாரணை முடிந்துவிடும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story