தமிழ்நாடு நாள் விழாவையொட்டி சிறப்பு புகைப்பட கண்காட்சி


தமிழ்நாடு நாள் விழாவையொட்டி சிறப்பு புகைப்பட கண்காட்சி
x

தமிழ்நாடு நாள் விழாவையொட்டி சிறப்பு புகைப்பட கண்காட்சி நடைபெற்றது.

கரூர்

தமிழ்நாடு நாளையொட்டி செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு குறித்த சிறப்பை எடுத்துரைக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்த சிறப்பு புகைப்பட கண்காட்சி அரங்கத்தினை கலெக்டர் பிரபுசங்கர் நேற்று திறந்து வைத்து பார்வையிட்டார். இந்த கண்காட்சி வருகிற 23-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இதில் சோதனையிலும் சாதனை (கொரோனா பெருந்தொற்று தடுப்புப்பணிகள், மழை பாதிப்பு துயர்நீக்க நடவடிக்கை), மகளிர் முன்னேற்றமே நாட்டின் முன்னேற்றம், மக்கள் நலன் பேணும் மகத்தான அரசு போன்ற தலைப்புகளில் புகைப்பட கண்காட்சிகள் இடம் பெற்றன. மேலும், சென்னை மாகாணத்திலிருந்து தமிழ்நாடு மாநிலம் பிரிக்கப்பட்டதை அறிந்து கொள்ளும் வகையிலும் மற்றும் பல்வேறு மாநில எல்லைகளை கணக்கீட்டு வரைப்பட கண்காட்சியும் அமைக்கப்பட்டு இருந்தது.

இதனைத்தொடர்ந்து தமிழ்நாடு நாள் குறித்து தமிழ் வளர்ச்சித்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் பள்ளி, மாணவ, மாணவிகளின் ஊர்வலம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மற்றும் தமிழ் மொழி குறித்த சிறப்பை எடுத்துரைக்கும் விதமாக பதாகைகளை மாணவ-மாணவிகள் ஏந்தி சென்றனர். முன்னதாக தமிழ்நாடு நாள் விழாவையொட்டி மாவட்ட அளவில் நடைபெற்ற கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகளில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு பாராட்டுச்சான்று மற்றும் பரிசுத்தொகைக்கான காசோலையினை கலெக்டர் வழங்கினார். மேலும் அரசு பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் தமிழ் பாடத்தில் அதிக மதிப்பெண் பெற்ற 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு கேடயம் மற்றும் புத்தகங்கள் வழங்கி கவுரவித்தார்.


Next Story