தனுஷ்கோடியில் சுற்றித்திரிந்த இலங்கை அகதி பிடிபட்டார்


தனுஷ்கோடியில் சுற்றித்திரிந்த இலங்கை அகதி பிடிபட்டார்
x
தினத்தந்தி 11 Aug 2023 6:45 PM GMT (Updated: 12 Aug 2023 11:31 AM GMT)

தனுஷ்கோடி கடற்கரையில் சுற்றித்திரிந்த இலங்கை அகதியை கடலோர போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

ராமநாதபுரம்

ராமேசுவரம்,

தனுஷ்கோடி கடற்கரையில் சுற்றித்திரிந்த இலங்கை அகதியை கடலோர போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

அகதி

ராமேசுவரம் அருகே உள்ள தனுஷ்கோடி 4-வது மணல் திட்டு பகுதியில் அகதி ஒருவர் தவிப்பதாக கடலோர போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதை தொடர்ந்து ராமேசுவரம் கடலோர போலீசார் மீனவர்கள் உதவியுடன் மீன்பிடி படகில் அந்த மணல் திட்டுக்கு சென்று தேடினர். ஆனால் அங்கு யாரும் இல்லாததால் திரும்பி வந்துவிட்டனர்.

இதற்கிடையே தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையில் சுற்றித்திரிந்த இலங்கையை சேர்ந்த நபர் ஒருவரை கடலோர போலீசார் பிடித்து, மண்டபம் கடலோர காவல் நிலையம் அழைத்து வந்தனர். அவரிடம் மத்திய, மாநில உளவுத்துறை போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினார்கள்.

பாஸ்போர்ட்

விசாரணையில், இலங்கை யாழ்ப்பாணம் கொட்டடி பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் (வயது 54) என்பதும், இவருடைய மனைவி மற்றும் குடும்பத்தினர் புதுக்கோட்டை அகதிகள் முகாமில் வசித்து வருவதும் தெரியவந்துள்ளது.

ரவிச்சந்திரன், சவுதி அரேபியாவில் டிரைவராக இருந்து வந்ததாகவும் கடந்த 2022-ம் ஆண்டு அங்கிருந்து விமானம் மூலம் இந்தியா வந்து தனது குடும்பத்தினருடன் தங்கி உள்ளார். அதன் பின்னர் விமானத்தில் இலங்கை சென்றார். அங்கிருந்து மீண்டும் வேலைக்்காக சவுதி அரேபியா செல்ல திட்டமிட்டுள்ளார். ஆனால் அவரது பாஸ்போர்ட்டை தொலைத்து விட்டதால் அங்கு செல்ல முடியாமல், மீண்டும் தன் குடும்பத்தினருடன் சேர்ந்து வாழ முடிவு செய்ததாக கூறப்படுகிறது.

ரூ.1½ லட்சம்

நேற்று முன்தினம் இரவு மன்னார் தாவுபாடு கடற்கரையில் இருந்து பிளாஸ்டிக் படகில், 2 படகோட்டிகள் இவரை அழைத்து வந்து நடுக்கடலில் மணல் திட்டு பகுதியில் இறக்கிவிட்டு சென்று விட்டதாகவும், மணல் திட்டில் இருந்து தமிழகத்தைச் சேர்ந்த மீன்பிடி படகு ஒன்றில் ஏறி தனுஷ்கோடி கடற்கரைக்கு வந்ததாகவும் தெரிவித்துள்ளார். படகில் தப்பி வருவதற்கு இலங்ைக பணம் ரூ.1½ லட்சம் படகோட்டிகளுக்கு கொடுத்ததாகவும் தெரியவந்துள்ளது. அவரிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதே நேரத்தில் 4-வது மணல் திட்டில் தவித்த இலங்கை அகதியை படகில் ஏற்றி வந்து தனுஷ்கோடி கடற்கரையில் இறக்கிவிட்ட மீனவர் யார்? என்றும் கடலோர போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story