சென்னையில் சுதந்திர தின விழாவையொட்டி இயக்கப்பட்ட நீராவி என்ஜின்


சென்னையில் சுதந்திர தின விழாவையொட்டி இயக்கப்பட்ட நீராவி என்ஜின்
x

சுதந்திர தின விழாவையொட்டி சென்னையில் இயக்கப்பட்ட நீராவி என்ஜினை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்தனர்.

சென்னை,

சுதந்திர தினத்தையொட்டி பாரம்பரியமான ரெயில் இயக்கத்தை நினைவு கூரும் வகையில் இ.ஐ.ஆர்-21 என்ற உலகின் மிகவும் பழமையான நீராவி என்ஜின் ரெயில் நேற்று சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து கோடம்பாக்கம் ரெயில் நிலையத்துக்கு இயக்கப்பட்டது. இதனை தெற்கு ரெயில்வே பொது மேலாளர் பி.ஜி.மல்யா கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

இந்த நீராவி என்ஜின் இந்தியாவின் பயன்பாட்டிற்காக 1855-ம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டு அவுரா-ராணிகாஞ்ச் இடையே கிழக்கு இந்திய நிறுவனத்தால் முதன் முதலாக இந்தியாவில் இயக்கப்பட்டது.

காட்சி பொருள்

இந்தியாவில் 55 ஆண்டுகள் தொடர்ந்து பயன்பாட்டில் இருந்து வந்த இந்த ரெயில், 1909-ம் ஆண்டுக்கு பின்னர் பீகாரில் உள்ள ஜமால்பூர் தொழிற்சாலையில் சேவையில் இருந்து விலக்கப்பட்டு 101 ஆண்டுகளுக்கும் மேலாக காட்சி பொருளாக வைக்கப்பட்டது.

பின்னர் பெரம்பூரில் உள்ள ஐ.சி.எப் தொழிற்சாலைக்கு கடந்த 2010-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டு மறுசீரமைக்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டது. இதையடுத்து அந்த ஆண்டு முதல் ஒவ்வொரு சுதந்திர தினத்தன்றும், பாரம்பரிய ரெயில் இயக்கத்தை நினைவு கூரும் வகையில் சென்னையில் இந்த ரெயில் தொடர்ந்து இயக்கப்பட்டு வருகிறது. இதுவரை 8 முறை இயக்கப்பட்டுள்ளது.

பயணிகள் ஆர்வம்

கொரோனா பேரிடர் காலத்தில் கடந்த 2 ஆண்டுகளாக இயக்கப்படாமல் இருந்த இந்த ரெயில் என்ஜின் 9-வது முறையாக நேற்று இயக்கப்பட்டது. 167 ஆண்டு பழமையான இந்த என்ஜின் நிலக்கரி மூலம் நீராவியால் இயங்கக்கூடியது.

விசில் சத்தத்துடன்'குபு குபு'வென புகையை வெளியேற்றியபடி இந்த பழைய ரெயில் என்ஜின் பயணிக்கும் அழகை காண ஏராளமான குழந்தைகள், இளைஞர்கள் முதல் முதியோர் வரை ரெயில் நிலையங்களில் கூடி ஆர்வத்துடனும், குதூகலத்துடனும் கண்டு மகிழ்ந்தனர்.

இந்த ரெயில் பயணத்தில் ரெயில்வே அதிகாரிகளின் குடும்பங்கள் மட்டுமேபயணித்ததால், ரெயிலை பார்வையிட வந்த பயணிகள், ரெயிலில் பயணிக்க முடியாத ஏக்கத்துடன் நடைமேடைகளில் ரெயில் என்ஜின் அருகே நின்று 'செல்பி' எடுத்து கலைந்து சென்றனர்.


Next Story