பெண்கள் மத்தியில் பரப்பரப்பை கிளப்பிய 10 பைசா...
பெண்கள் மத்தியில் பரப்பரப்பை கிளப்பிய 10 பைசா...
போடிப்பட்டி
பெண்களின் வங்கிக் கணக்கில் திடீரென்று 10 பைசா வரவு வைக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அண்ணா பிறந்த நாள்
தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் வகையில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டத்தை அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் மாதம் 15-ந் தேதி (அதாவது நாளை-வெள்ளிக்கிழமை) தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இந்த திட்டத்துக்கான பயனாளிகளை தேர்வு செய்வதற்கு ஆண்டு வருமானம் ரூ.2½ லட்சத்துக்கு கீழே இருக்க வேண்டும். கார், ஜீப், டிராக்டர் உள்ளிட்ட 4 சக்கர வாகனங்கள் வைத்திருப்பவராக, ஆண்டுக்கு 3600 யூனிட்டுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்துபவராக இருக்கக்கூடாது என்பன உள்ளிட்ட பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.
மேலும் தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு குடும்பத் தலைவிகளிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந்த திட்டத்தில் 1 கோடியே 63 லட்சம் குடும்பத்தலைவிகள் விண்ணப்பித்திருந்தனர்.அவற்றை பரிசீலித்து தகுதியான குடும்பத்தலைவிகள் என்ற வகையில் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் பயனாளிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
கிடைக்குமா?
சுமார் 56½ லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், தங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட பட்டியலில் இருக்குமோ? என்ற பதட்டம் பல பெண்களுக்கு ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் விண்ணப்பித்த பலருக்கு வங்கிக் கணக்கில் 10 பைசா வரவு வைக்கப்பட்டுள்ளது. மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டவர்களின் வங்கிக் கணக்குகளை சரிபார்க்கும் வகையில் இந்த தொகை வரவு வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. சிலரின் வங்கிக் கணக்கில் ரூ. 1-ம் வரவு வைக்கப்பட்டுள்ளது. தற்போது ரேஷன் கடை, பஸ் நிறுத்தம் என ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ளும் அறிமுகமான பெண்கள் கேட்கும் கேள்வி "அக்கா..உங்களுக்கு 10 பைசா வந்துச்சா..?' என்பதாகவே உள்ளது.10 பைசா வந்தவர்கள் தங்களுக்கு உரிமைத்தொகை கண்டிப்பாக கிடைக்கும் என்ற நம்பிக்கையிலும், இதுவரை வராதவர்கள் கிடைக்குமோ? கிடைக்காதோ? என்ற தவிப்பிலும் உள்ளனர்.
--------------