புலியுடன் போரிட்டு வீரமரணம் அடைந்த வீரனுக்கு அமைக்கப்பட்ட நடுகல்


புலியுடன் போரிட்டு வீரமரணம் அடைந்த வீரனுக்கு அமைக்கப்பட்ட நடுகல்
x

ஆம்பூர் அருகே கீழ்முருங்கை கிராமத்தில் புலிக்குத்திப்பட்டான் நடுகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

திருப்பத்தூர்

ஆம்பூர் அருகே கீழ்முருங்கை கிராமத்தில் புலிக்குத்திப்பட்டான் நடுகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புலியுடன் போரிட்டு வீரமரணம் அடைந்த வீரனுக்கு இந்த நடுகல் எழுப்பப்பட்டுள்ளதாக இதனை ஆய்வு செய்த கல்லூரி பேராசிரியர்கள் தெரிவித்தனர்.

நடுகல் கண்டுபிடிப்பு

திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியின் தமிழ்த்துறைப் பேராசிரியர் க.மோகன்காந்தி, வாணியம்பாடி இசுலாமியா கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவரான பேராசிரியர் ப.சிவராஜி, ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் இயக்குனர் வெங்கடேசன், காணிநிலம் மு.முனிசாமி ஆகியோர் மேற்கொண்ட கள ஆய்வில் புலிக்குத்திப்பட்டான் நடுகல் ஒன்றைக் கண்டறிந்துள்ளனர்.

இது குறித்து பேராசிரியர் க.மோகன்காந்தி கூறுகையில், ''ஆம்பூர் அருகே கீழ்முருங்கை கிராமத்தில் உள்ள ஞானமலைக்குத் தெற்கு மலைப் பகுதியில் மலையப்பன் சாமி கோவில் உள்ளது. இக்கோவில் துறிஞ்சி மரங்களுக்கடியில் அடர்ந்த வனப்பகுதியில் உள்ளது. இங்கு நடுகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த நடுகல்லில் புலியின் உருவமும் வீரன் ஒருவரின் உருவமும் இடம் பெற்றுள்ளது. முன்னங்கால்களைப் புலியின் தலைப்பகுதிக்கு மேல் தூக்கியவாறு குதிரை கோபத்தோடு நடுகல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

வரலாற்று தகவல்கள்

குதிரையின் மேல்அமர்ந்துள்ள வீரன், கைகளில் வீரக் கடகங்களும் கால்களில் வீரக்கழல்களும் அணிந்த கோலத்தில் காணப்படுகிறான். இடது கையால் குதிரையின் கடிவாளத்தைப் பிடித்த கோலத்திலும், வலது கையில் நீண்ட கூரிய வேல்கம்பு ஒன்றைப் புலியின் கொடிய வாயில் வீரன் குத்துவது போன்றும் நடுகல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

புலி தனது பின்னங்கால்களைத் தரையில் ஊன்றி அமர்ந்த கோலத்திலும், புலியின் முன்னங்கால்கள் மேல் நோக்கி வீரனைத் தாக்கத் தயராகும் கோலத்திலும் உள்ளது.

இந்த நடுகல் கி.பி 16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த விஜய நகரக் காலத்துப் புலிக்குத்திப்பட்டான் நடுகல்லாகும்.

இக்கோவிலின் கிழக்கு, மேற்கு, தெற்கு என மூன்று பக்கங்களிலும் மலைகள் சூழ்ந்துள்ளன. வடக்குத் திசையில் சிறிய கானாறு ஒன்று ஓடுகிறது.

மலைகளும், காடுகளும், ஓடைகளும் சூழ்ந்த இயற்கை சார்ந்த இந்தப் பகுதியில் கி. பி 16-ம் நூற்றாண்டு வாக்கில் புலிகள் வாழ்ந்துள்ளன. அவை ஊருக்குள் புகுந்து பொதுமக்களையும், ஆடு, மாடுகளையும் கொன்று வந்துள்ளன.

இதனை வீரன் ஒருவன் குதிரையில் ஏறிச் சென்று போரிட்டுக் கொன்றுள்ளதை நடுகல் படைப்புச் சிற்பம் வெளிப்படுத்துகிறது.

இவ்வீரனின் தலையில் கீரிடம் போன்ற அமைப்புக் காணப்படுவதால் இவன் ஒரு இனக்குழுத் தலைவனாக இருந்திருக்க வேண்டும்.

3 வரிகள்

தனது ஊரைப் புலியிடம் இருந்து காப்பாற்றுவதற்காகப் புலியோடு போரிட்டு வீரமரணம் அடைந்த இவ்வீரனைப் போற்றும் விதமாக இந்த நடுகல் நடப்பட்டுள்ளது. இந்த நடுகல்லில் மூன்று வரிகள் கொண்ட வெங்கடப்பன், அம்மகர் முத்தப்பன், கொண்டப்பன் என்று பொறிக்கப்பட்டுள்ளது.இந்த நடுகல் ஏறத்தாழ 500 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழரின் வீரம் சார்ந்த வாழ்வியலை வெளிப்படுத்துகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Related Tags :
Next Story