ஆண்கள் மட்டுமே பங்கேற்ற வினோத திருவிழா


ஆண்கள் மட்டுமே பங்கேற்ற வினோத திருவிழா
x
தினத்தந்தி 9 Oct 2022 6:45 PM GMT (Updated: 9 Oct 2022 6:45 PM GMT)

கமுதி அருகே ஆண்கள் மட்டுமே பங்கேற்ற வினோத திருவிழாவில் 50 ஆடுகள் பலியிட்டும், சாத உருண்டைகள் படைத்தும் வழிபட்டனர்.

ராமநாதபுரம்

கமுதி,

கமுதி அருகே ஆண்கள் மட்டுமே பங்கேற்ற வினோத திருவிழாவில் 50 ஆடுகள் பலியிட்டும், சாத உருண்டைகள் படைத்தும் வழிபட்டனர்.

வினோத திருவிழா

ராமநாதபுரம் அருகே கமுதி அருகே முதல்நாடு கிராமம் உள்ளது. இங்குள்ள கண்மாய் கரையில் உள்ளது எல்லைப்பிடாரி அம்மன் பீடம். இங்கு வருடத்திற்கு ஒரு முறை புரட்டாசி மாதத்தில் ஆண்கள் மட்டும் வழிபடும் வினோத திருவிழா நடைபெறுகிறது. பழங்காலத்தில் ஐந்து ஆண்களோடு பிறந்த பெண் ஒருவர் தனது அண்ணியார்களால் துன்புறுத்தப்பட்டு வீட்டிலிருந்து வெளியேறி இந்த இடத்தின் அருகே வந்தவுடன் மாயமானார்.

பின்னர் முதல்நாடு கிராம மக்களின் அந்த பெண் கனவில் வந்து நான் இந்த இடத்தில் தெய்வமாக இருந்து காப்பாற்றுவேன் எனவும், என்னை ஆண்கள் மட்டும் வருடம் ஒரு முறை ஆடுகளை பலியிட்டு வழிபடவேண்டும் என்றும், பெண்கள் அப்போது அப்பகுதிக்கு வரக்கூடாது எனவும் கூறியதால் ஆண்டுதோறும் இந்த திருவிழா நடப்பதாக அப்பகுதி மக்கள் கூறினர்.

50 ஆடுகள்

திருவிழா நடக்கும் நாள் கடந்த ஒரு வாரத்திற்கு முன் அறிவித்ததால், அதிலிருந்து திருவிழா நடக்கும் பகுதிக்கு பெண்கள் யாரும் வரவில்லை. இந்த திருவிழா நேற்று நள்ளிரவு நடந்தது. ஆண்கள் ஒன்று கூடி மண்ணால் பீடம் அமைத்து எல்லைப்பிடாரி அம்மன் உருவம் செய்தனர். பின்னர் கைக்குத்தல் பச்சரிசி சாதம், 50 செம்மறி கிடாய்கள் பலியிட்டு, அதன் தலைகளை பீடத்திற்கு முன்பு வைத்து, சாதத்தை உருண்டைகளாக உருட்டி பூஜை செய்தனர். தொடர்ந்து பனை ஓலையால் செய்த மட்டையில் சாப்பாடு பரிமாறப்பட்டது. இந்த சாப்பாட்டினை வீட்டிற்கு கொண்டு செல்லக்கூடாது என்பதால் மீதமிருந்த உணவுகள் அங்கேயே மண்ணில் குழி தோண்டி புதைக்கப்பட்டது.

5 ஆயிரம் ஆண்கள்

இந்த விழாவில் கமுதி, முதல்நாடு, முஸ்டக்குறிச்சி, அரிசிகுழுதான், கே.நெடுங்குளம், பெருமாள்குடும்பன்பட்டி, ஆசூர், திருசெல்லையாபுரம், தலைவநாயக்கன்பட்டி, உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து முதல்நாடு கிராமத்தை சேர்ந்த கணேசன் கூறுகையில், நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி இந்த திருவிழா நடத்தப்படுகிறது. இதற்காக வயல்களில் விளைந்த நெல்மணிகளை கிராமத்தில் உள்ள விவசாயிகளிடம் இருந்து நேர்த்திக்கடனாக பெறப்படும். ஆடுகளை பலியிட்டு சமைத்து அம்மனுக்கு படையலிட்டு அதை ஆண்களுக்கு மட்டுமே அன்னதானமாக வழங்கப்படும் என்றார்.


Next Story