நம்பியூர் அருகே கீற்று கொட்டகை தீப்பிடித்து எரிந்தது
நம்பியூர் அருகே கீற்று கொட்டகை தீப்பிடித்து எரிந்தது
நம்பியூர்
நம்பியூர் அருகே உள்ள எம்மாம்பூண்டி காலனி பெருமாள் கோவில் வீதியை சேர்ந்தவர் சரஸ்வதி (வயது 42). இவருடைய கணவர் மாகாளி. ஏற்கனவே அவர் இறந்துவிட்டார். பேரன் ஸ்ரீசக்தி (7), பேத்தி குணா (3) ஆகியோருடன் சரஸ்வதி வசித்து வந்தார். இந்தநிலையில் நேற்று சரஸ்வதி குழந்தைகளை வீட்டில் பத்திரமாக இருக்க சொல்லிவிட்டு வேலைக்கு சென்று விட்டார். அப்போது ஸ்ரீசக்தி தீப்பட்டியை எடுத்து தீக்குச்சியை பற்றவைத்து விளையாடியதாக தெரிகிறது. அப்போது ஒரு தீக்குச்சி வீட்டின் முன்னால் போட்டிருந்த கீற்று கொட்டகையில் பட்டுவிட்டது. அதனால் கொட்டகை தீப்பிடித்து மளமளவென எரிந்தது. குழந்தைகள் அங்கிருந்து வெளியே ஓடிவிட்டனர். இதையறிந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக நம்பியூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். உடனே அணைக்கப்பட்டதால் பெரும் தீவிபத்து தவிர்க்கப்பட்டது.