காங்கிரஸ் கட்சியை மையமாக வைத்து பலமான அரசியல் கூட்டணி அமையும்-கார்த்தி சிதம்பரம் எம்.பி. பேட்டி
பா.ஜ.க.விற்கு எதிராக காங்கிரசை மையமாக வைத்து பலமான அரசியல் கூட்டணி அமையும் என்று கார்த்தி சிதம்பரம் எம்.பி. கூறினார்
பா.ஜ.க.விற்கு எதிராக காங்கிரசை மையமாக வைத்து பலமான அரசியல் கூட்டணி அமையும் என்று கார்த்தி சிதம்பரம் எம்.பி. கூறினார்.
பேட்டி
சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் சிவகங்கையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அமலாக்கத்துறை என்பது தேவையில்லாத ஒன்று. சோதனை, கைது என்பதெல்லாம் தேவையில்லாத வேலைகள்தான். வேண்டுமென்றால் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி விசாரிக்கலாம்.
பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவத்தை காரணம் கூறி சோதனை செய்வதை ஏற்க முடியாது. இதற்கான ஒரு பிரிவு உள்ளது. அவர்கள் விசாரிக்கலாம். அமலாக்கத்துறை என்பது போதை பொருள் கடத்தல், ஆயுத கடத்தல் போன்ற நிகழ்வுகள் நடைபெறும் சட்ட விரோத பண பரிவர்த்தனையை கண்டுபிடிக்கதான் கொண்டு வரப்பட்டது.
பலமான அரசியல் கூட்டணி
ஆனால் மத்திய அரசு தற்போது அமலாக்கத்துறையை ஆயுதமாக பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை அச்சுறுத்தி அரசியல் செய்கிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி பெற்ற வெற்றியைப் போல 2024-ம் ஆண்டு தேர்தலிலும் கிடைக்கும். இன்னும் சொல்லப்போனால் கூடுதலான இடங்கள் கிடைக்கலாம். பா.ஜ.க.வுக்கு எதிராக கட்சிகள் ஒன்று கூடி கூட்டணி அமைக்க பேசி வருகின்றன.. தற்போது 2-வது சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் காங்கிரசை மையமாக வைத்து பலமான அரசியல் கூட்டணி அமையும். இவ்வாறு அவர் கூறினார்.