மூங்கில்துறைப்பட்டு அருகே கிணற்றில் மூழ்கி மாணவன் பலி


மூங்கில்துறைப்பட்டு அருகே கிணற்றில் மூழ்கி மாணவன் பலி
x

மூங்கில்துறைப்பட்டு அருகே கிணற்றில் மூழ்கி மாணவன் உயிரிழந்தார்.

கள்ளக்குறிச்சி

மூங்கில்துறைப்பட்டு,

மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள ஆற்கவாடி பகுதியை சேர்ந்தவர் அய்யனார் மகன்கள் சரத்குமார் (வயது 15), சிவக்குமார் (13). இதில் சரத்குமார், மூங்கில்துறைப்பட்டில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பும், சிவக்குமார் ஆற்கவாடியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் 8-ம் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று பள்ளிக்கூடம் விடுமுறை என்பதால், சரத்குமாரும், சிவக்குமாரும் அதே பகுதியில் உள்ள அவர்களது விவசாய கிணற்றில் குளிப்பதற்காக சென்றனர். இருவரும் கிணற்றில் இறங்கி குளித்துக்கொண்டிருந்தபோது திடீரென சிவக்குமார் தண்ணீரில் மூழ்கினான். இதனால் அதிர்ச்சியடைந்த சரத்குமார், வெளியே வந்து சிவக்குமார் தண்ணீரில் மூழ்கியது குறித்து அக்கம்பக்கத்தினரிடம் தெரிவித்தான். உடனே அவர்கள் கிணற்றில் இறங்கி தண்ணீரில் மூழ்கிய மாணவனை தேடும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் அவனை மீட்க முடியவில்லை.

போலீசார் விசாரணை

இதுபற்றி அறிந்த சங்கராபுரம் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து 5-க்கும் மேற்பட்ட மின் மோட்டார் மூலம் கிணற்றில் இருந்த தண்ணீரை வெளியேற்றனர். அப்போது சிவக்குமார் கிணற்றில் பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சிவக்குமாரின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து மூங்கில்துறைப்பட்டு சப்-இன்ஸ்பெக்டர் உலகநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

1 More update

Next Story