அரசு பஸ்சில் இருந்து தவறி விழுந்த மாணவர் படுகாயம்
அரசு பஸ்சில் இருந்து தவறி விழுந்த மாணவர் படுகாயம் படிக்கட்டில் பயணம் செய்ததால் விபரீதம்
உளுந்தூர்பேட்டை
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஏ.சாத்தனூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜீவ் காந்தி மகன் ராஜேஷ்(வயது 15). உளுந்தூர்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வரும் இவர் சம்பவத்தன்று உளுந்தூர்பேட்டை நோக்கி சென்ற அரசு பஸ்சில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். பஸ்சின் முன்பக்க படிக்கட்டில் நின்றபடி ராஜேஷ் பயணம் செய்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பாலி சிறப்பு காவல் படை முகாம் எதிரே வந்த போது திடீரென டிரைவர் பிரேக் பிடித்தார். இதில் படிக்கட்டில் நின்று பயணம்செய்துகொண்டிருந்த ராஜேஷ் எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்தார். இதில் அவரது இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு வலியால் துடித்தார். உடனே ராஜேசை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த விபத்து குறித்து எடைக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.