கலைத்திருவிழா மீதான ஈர்ப்பால் மீண்டும் பள்ளிக்கு வந்த மாணவர்


கலைத்திருவிழா மீதான ஈர்ப்பால் மீண்டும் பள்ளிக்கு வந்த மாணவர்
x

கலைத்திருவிழா மீதான ஈர்ப்பால் மீண்டும் பள்ளிக்கு மாணவர் வந்தார்.

திருச்சி

மணப்பாறை:

மருங்காபுரி ஒன்றியம், ஊனையூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் சுமார் 174 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். பள்ளியில் 9-ம் வகுப்பு பயின்று வந்த மாணவர் சந்திரன் கடந்த மூன்று மாதமாக பள்ளிக்கு வரவில்லை. இதையடுத்து பள்ளியின் தலைமை ஆசிரியர் வடிவேலு மற்றும் சமூக அறிவியல் ஆசிரியை ஜெயராணி, உடற்கல்வி ஆசிரியர் சுப்பிரமணியன் ஆகியோர் பலமுறை நேரில் சென்று அவரை பார்க்க முயன்றும் முடியவில்லை. தப்பு அடிக்கும் வேலைக்காக மாணவர் வெளியூருக்கு அடிக்கடி செல்வதால், அவரைப் பார்க்க இயலாத நிலை ஏற்பட்டது. அக்கம் பக்கத்தில் விசாரித்தும் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.

தற்போது தமிழக அரசின் சார்பாக பள்ளிக்கல்வி துறையில் கலைத்திருவிழா நடைபெற்று வருவதால், அதை பயன்படுத்தி அவரை பள்ளிக்கு வர வைக்கலாம் என்று முடிவு செய்து தலைமை ஆசிரியர் உள்ளிட்டோர், அந்த மாணவரை சந்தித்து கலை திருவிழா போட்டியில் பங்கேற்க வாய்ப்பு தருவதாக கூறி, பள்ளிக்கு அழைத்தனர். தொடர்ந்து பள்ளிக்கு வருகை புரிந்தால் போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பு அளிப்பதாகவும் கூறினர். இதையடுத்து கலைத்திருவிழா மீதான ஈர்ப்பால் அந்த மாணவர் நேற்று பள்ளிக்கு வந்து, காலை வழிபாட்டுக் கூட்டத்தில் தான் போட்டிகளில் பங்கேற்பதாகவும், தொடர்ந்து பள்ளிக்கு வருகை புரிவேன் என்றும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் முன்னிலையில் வாக்குறுதி அளித்தார். அவரை ஆசிரியர்களும், மாணவர்களும் வரவேற்றனர்.


Next Story