கலெக்டர் அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் திடீர் தர்ணா


கலெக்டர் அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் திடீர் தர்ணா
x

கலெக்டர் அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் திடீர் தர்ணாவில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை

பொதுமக்கள் திடீர் தர்ணா

புதுக்கோட்டை மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் (பொறுப்பு) செல்வி தலைமை தாங்கினார். கூட்டத்தில் பொதுமக்கள் பலர் தங்களது கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்தனர்.

இதில் புதுக்கோட்டை அருகே மேலவிடுதி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் சிலர் மனு அளிக்க வந்திருந்தனர். அவர்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் திடீரென தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது, மேலவிடுதி கிராமத்தில் ஆதிதிராவிடர் வசிக்கும் பகுதிக்கு செல்லக்கூடிய சாலையை தனிநபர்கள் ஆக்கிரமித்திருப்பதாகவும், ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்கக்கோரி பலமுறை மனு கொடுத்தும் எந்தவித பயனும் இல்லை என்றும் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கல் உடைக்கும் தொழிலாளர்கள்

இதையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் அதிகாரிகளிடம் மனு அளிக்க அறிவுறுத்தினர். இதில் சமாதானமடைந்த அவர்கள் மனு கொடுக்க சென்றனர். இந்த போராட்டத்தால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

நார்த்தாமலை, மணியடிப்பட்டி, சமத்துவபுரம், ஆவுடையான்காடு, பொம்மாடிமலை ஆகிய இடங்களில் இருந்து கல் உடைக்கும் தொழிலாளர்கள் மனு கொடுக்க வந்திருந்தனர். அவர்கள் அளித்த மனுவில், மலையடிப்பகுதியில் கல் வெட்டி எடுக்க அரசு அனுமதி வழங்க வேண்டும் என்று தெரிவித்திருந்தனர். இதேபோல் பொதுமக்கள் பலர் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்தனர். கூட்டத்தில் மொத்தம் 310 மனுக்கள் பெறப்பட்டன. அதனை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க கலெக்டர் (பொறுப்பு) செல்வி அறிவுறுத்தினார்.


Next Story