ஓடும் வேனில் திடீர் தீ


ஓடும் வேனில் திடீர் தீ
x

ஓடும் வேனில் திடீரென தீப்பற்றி எரிந்தது.

திருச்சி

வேனில் தீப்பொறி

திருச்சி அரியமங்கலம் ெரயில் நகர் பகுதியில் வசித்து வருபவர் அலெக்சாண்டர். இவர், நேற்று மாலை துணிகள் மற்றும் பொருட்கள் வாங்குவதற்காக தனது குடும்பத்தினருடன் ஒரு வேனில் கடைவீதிக்கு சென்றார். பின்னர் அவர்கள் வீட்டிற்கு வந்து துணிகள் மற்றும் பொருட்களை வைத்துவிட்டு, இரவு 10 மணியளவில் சாப்பிடுவதற்காக அருகில் உள்ள ஓட்டலுக்கு வேனில் சென்றுள்ளனர்.

வீட்டில் இருந்து சிறிது தூரத்தில் சென்றபோது வேனின் பின்புறத்தில் தீப்ெபாறி ஏற்பட்டது. இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் கூச்சலிட்டனர். இதனால் உடனடியாக வேனை நிறுத்தி, அதில் இருந்து அலெக்சாண்டர் மற்றும் அவரது குடும்பத்தினர் இறங்கி சிறிது தூரம் சென்று நின்றனர்.

எரிந்து நாசம்

சிறிது நேரத்தில் வேன் முழுவதும் தீப்பற்றி எரிந்தது. இச்சம்பவம் குறித்து அருகில் இருந்தவர்கள் கண்டோன்மெண்ட் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் நிலைய அலுவலர் நாகராஜன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் உடனடியாக அங்கு வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து வேனில் எரிந்த தீயை அணைத்தனர். இருப்பினும் வேன் முழுவதும் எரிந்து எலும்புக்கூடுபோல் காட்சியளித்தது.

இச்சம்பவம் பற்றி தகவல் அறிந்த அரியமங்கலம் போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்து, வேனில் எப்படி தீப்பற்றியது என்பது குறித்து விசாரணை நடத்தினர். இந்த வேன் கியாஸ் சிலிண்டர் பொருத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வேனில் தீப்பொறி ஏற்பட்டதை அறிந்து அலெக்சாண்டர் மற்றும் அவரது குடும்பத்தினர் அதில் இருந்து இறங்கியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story