நடுரோட்டில் திடீர் பள்ளம்


நடுரோட்டில் திடீர் பள்ளம்
x
தினத்தந்தி 28 Oct 2022 12:15 AM IST (Updated: 28 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஆனைமலை-வெப்பரை இடையே நடுரோட்டில் திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர்.

கோயம்புத்தூர்

ஆனைமலை

ஆனைமலை-வெப்பரை இடையே நடுரோட்டில் திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர்.

பிரதான சாலை

ஆனைமலையில் இருந்து வெப்பரை பகுதிக்கு தார்சாலை செல்கிறது. இந்த சாலையை சுள்ளிமேட்டுபதி, காக்கா கொத்திபாறை, கே.பி.எம். காலனி உள்ளிட்ட கிராம மக்கள் பிரதானமாக பயன்படுத்தி வருகின்றனர். இங்கு தென்னை மற்றும் நெல் சாகுபடி பிரதானமாக உள்ளது. இதன் காரணமாக விவசாய பணிக்காக கனரக வாகனங்கள் அதிகளவில் இயக்கப்படுகின்றன.

இந்த நிலையில் ஆனைமலை-வெப்பரை சாலை மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. குறிப்பாக ஆங்காங்கே குழி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

தேங்கும் மழைநீர்

இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:-

ஆனைமலை-வெப்பரை சாலையில் உப்பாறு பாலத்தில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவுக்கு குண்டும், குழியுமாக உள்ளது. இங்கு பருவமழைக்காலங்களில் அருகில் உள்ள தோட்டங்களில் இருந்து மழைநீர் பாய்ந்தோடி வருகிறது. இதனால் சாலையில் ஏற்பட்டுள்ள குழியில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.

அப்போது அந்த வழியாக செல்பவர்களின் நிலையை சொல்லி மாளாது. தெருவிளக்கு வசதியும் சரிவர இல்லாததால், இரவில் செல்பவர்கள் மிகுந்த இன்னலை சந்திக்கின்றனர். குறிப்பாக சாலையில் ஏற்படும் திடீர் பள்ளங்களால் விபத்தில் சிக்கிவிடுகின்றனர். இதனால் அந்த வழியாக செல்லவே அச்சப்படுகிறார்கள். எனவே சாலையை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story