முடிக்காணிக்கை நிலைய தொழிலாளர்கள் திடீர் போராட்டம்


முடிக்காணிக்கை நிலைய தொழிலாளர்கள் திடீர் போராட்டம்
x
தினத்தந்தி 20 Sep 2023 7:45 PM GMT (Updated: 20 Sep 2023 7:45 PM GMT)

பழனி கோவில் பெண் உதவி ஆணையரை கண்டித்து முடிக்காணிக்கை நிலைய தொழிலாளர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்

முடிக்காணிக்கை

உலக பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் முடிக்காணிக்கை செலுத்தி நேர்த்திக்கடனை நிறைவேற்றுவது வழக்கம். எனவே பக்தர்களின் வசதிக்காக கோவில் நிர்வாகம் சார்பில் அடிவாரம், கிரிவீதி, சரவணப்பொய்கை, சண்முகநதி உள்ளிட்ட பகுதிகளில் முடிக்காணிக்கை நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

இந்த முடிக்காணிக்கை நிலையங்களில் கட்டணம் ஏதுமின்றி பக்தர்கள் முடிக்காணிக்கை செலுத்தி செல்கின்றனர். இந்நிலையில் பழனி கோவில் முடிக்காணிக்கை நிலையத்தில் மொட்டை அடிக்க வரும் பக்தர்களிடம் பணம் வசூலிப்பதாக பரவலான குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இதுதொடர்பாக புகார்கள் வந்தால் சம்பந்தப்பட்ட தொழிலாளர்கள் மீது கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

திடீர் போராட்டம்

இந்நிலையில் கோவில் பெண் உதவி ஆணையரை கண்டித்து பழனி கோவில் முடிக்காணிக்கை நிலைய தொழிலாளர்கள் நேற்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக அவரை கண்டிக்கும் வகையில் வாசகங்கள் கொண்ட 'பேட்ஜ்'சை சட்டையில் அணிந்தபடி பணிக்கு வந்தனர்.

இதுபற்றி தொழிலாளர்கள் கூறும்போது, காலங்காலமாக பின்பற்றி வரும் தொழிலாளர்களின் உரிமைகள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து முறையிடும் தொழிலாளர்களை உதவி ஆணையர் அவமரியாதையாக நடத்துகிறார். எனவே அவர் மீது அறநிலையத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். பழனியில் முடிக்காணிக்கை நிலைய தொழிலாளர்களின் இந்த போராட்டம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Related Tags :
Next Story