வேளாண்மை இணை இயக்குனர் திடீர் ஆய்வு
சங்கராபுரத்தில் வேளாண்மை இணை இயக்குனர் திடீர் ஆய்வு
சங்கராபுரம்
கள்ளக்குறிச்சி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் கருணாநிதி சங்கராபுரம் வேளாண்மை விரிவாக்க மையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது விதை இருப்பு கிடங்கில் இருப்பு மற்றும் விதை விற்பனையை ஆய்வு செய்த அவர் அனைத்து நிலை அலுவலர்களிடமும் 2023-24-ம் ஆண்டின் திட்ட பணிகளை குறித்த காலத்தில் விரைந்து முடிக்க அறிவுரை வழங்கினார்.
தொடர்ந்து தேவபாண்டலம் கிராமத்தில் செந்தில்குமார் என்பவரின் வயலில் ராகி ரகம் கோ-15 சான்று நிலை விதைப்பண்ணை வயலை ஆய்வு செய்த அவர் அரசம்பட்டு கிராமத்தில் அமைக்கப்பட்டு இருந்த மணிலா ரகம் ஆதார நிலை 2 விதைப்பண்ணை வயலையும் பார்வையிட்டார். அப்போது அதிக மகசூல் எடுப்பதற்கான தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் மூலமாக தயாரிக்கப்பட்டுள்ள மணிலா நுண்ணூட்ட கலவையை ஏக்கருக்கு 2 கிலோ வீதம் 200 லிட்டர் தண்ணீரில் கலந்து கைத்தெளிப்பான் மூலமாக பூக்கும் தருணத்திலும், மீண்டும் 2 வாரங்கள் கழித்து ஒரு முறையும் தெளிப்பதனால் திரட்சியான மணிலா விதைகளை பெற முடியும் என்ற தொழில்நுட்பத்தை கூறினார். இந்த ஆய்வின் போது வேளாண்மை துணை இயக்குனர் விஜயராகவன், சங்கராபுரம் வேளாண்மை அலுவலர் ஆனந்தன், உதவி விதை அலுவலர்கள் முருகேசன், துரை ஆகியோர் உடன் இருந்தனர்.