அலையாத்திகாடு நீர் நிலைகளில் பறவைகள் கணக்கெடுப்பு


அலையாத்திகாடு நீர் நிலைகளில் பறவைகள் கணக்கெடுப்பு
x

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வடுவூர், உதயமார்த்தாண்டபுரம், அலையாத்திகாடு உள்ளிட்ட 20 நீர் நிலைகளில் வரும் 28-ந்தேதி முதல் பறவைகள் கணக்கெடுப்பு பணி 2 கட்டங்களாக நடக்கிறது.

திருவாரூர்

வடுவூர்:

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வடுவூர், உதயமார்த்தாண்டபுரம், அலையாத்திகாடு உள்ளிட்ட 20 நீர் நிலைகளில் வரும் 28-ந்தேதி முதல் பறவைகள் கணக்கெடுப்பு பணி 2 கட்டங்களாக நடக்கிறது.

இதுகுறித்து திருவாரூர் மாவட்ட வன அலுவலர் அறிவொழி கூறுகையில்:-

ஆசியாவிலேயே பெரிய மாங்குரோவ்

திருவாரூர் மாவட்டத்தில் வடுவூர் ஏரி பறவைகள் சரணாலயமாக உள்ளது. சுமார் 300 ஏக்கர் பரப்பளவிலான இந்த வடுவூர் ஏரிக்கு நவம்பர் மாதம் தொடங்கி மார்ச் மாதம் வரை வெளிநாட்டு பறவைகள் வந்து தங்கி இருக்கும். முத்துப்பேட்டை அருகே உள்ள உதயமார்த்தாண்டபுரத்திலும் பறவைகள் சரணாலயம் உள்ளது. மேலும் முத்துப்பேட்டை அருகே உள்ள ஜாம்பவானோடை பகுதியில் தொடங்கும் அலையாத்திக்காடு ஆசியாவிலேயே பெரிய மாங்குரோவ் காடாக உள்ளது.

இந்த மூன்று இடங்களிலும் மற்றும் அதனை சுற்றி பறவைகள் வரக்கூடிய அனைத்து நீர் நிலைகளில் வனத்துறை சார்பில் வருகிற 28, 29-ந் தேதிகள் மற்றும் அடுத்த மாதம்(மார்ச்) 4, 5-ந் தேதிகளில் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் பறவைகள் கணக்கெடுப்பு பணி ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை முடிந்த பிறகு நடைபெறும்.

2 கட்டங்களாக கணக்கெடுப்பு

அதன்படி 2022-2023-ம் ஆண்டுக்கான பறவைகள் கணக்கெடுக்கும் பணி, நீர்ப்பறவைகள் மற்றும் நிலப்பறவைகள் என 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. நீர்ப்பறவைகளின் கணக்கெடுப்பு வரும் 28, 29-ந் தேதிகளிலும், நிலப்பறவைகளின் கணக்கெடுப்பானது அடுத்த மாதம் 4 மற்றும் 5-ந் தேதிகளிலும் நடத்த உள்ளது.

பறவைகள் கணக்கெடுப்புக்காக தொடர் கண்காணிப்பு பணி மேற்கொள்ள வேண்டியுள்ளது., நீர் பறவைகளின் கணக்கெடுப்பு 20 இடங்களிலும், நிலப்பறவைகளின் கணக்கெடுப்புக்காக மாவட்டந்தோறும் 20 இடங்களிலும் மேற்கொள்ளப்பட உள்ளது. இதில் பறவை ஆர்வலர்கள், ஆராய்ச்சியாளர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் மற்றும் வனத்துறை பணியாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர். எனவே இதில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் மாவட்ட வன அலுவலர் அல்லது சம்பந்தப்பட்ட பகுதிகளில் உள்ள வனச்சரக அலுவலர்களை அணுகலாம்.


Next Story