உடல் நலக்குறைவால் பாதிப்பு உடல் நலக்குறையில் தவித்த தமிழர் விமானத்தில் அழைத்து வரப்பட்டார்


உடல் நலக்குறைவால் பாதிப்பு உடல் நலக்குறையில் தவித்த தமிழர் விமானத்தில் அழைத்து வரப்பட்டார்
x

உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு துபாயில் தவித்த தமிழர் விமானத்தில் சென்னை அழைத்து வரப்பட்டு, அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.

சென்னை

மீனம்பாக்கம்,

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் லப்பை குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் சபீயுல்லா அப்துல் சுபஹான். இவர், 2018-ம் ஆண்டு துபாயில் வேலைக்காக சென்றார்.

கடந்த மே மாதம் 24-ந்தேதி சிறுநீரகம் மற்றும் நுரையீரல் பாதிப்பால் உடல் நலம் பாதிக்கப்பட்டு அவர், அங்குள்ள ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவரை அருகில் இருந்து கவனித்துக்கொள்ள உறவினர்களோ, உதவியாளர்களோ யாரும் இல்லாததால் துபாயில் தவிக்கும் தனது கணவரை விமானம் மூலம் தமிழகத்துக்கு மீட்டு அழைத்து வரவேண்டும் என அவருடைய மனைவி ஷமிலா பானு, தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழா் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையத்துக்கு கடந்த 19-ந்தேதி கோரிக்கை மனு அளித்தார்.

இந்த மனுவை விசாரித்த அயலக தமிழர் நலத்துறை இயக்குனர் ஜெசிந்தா லாசரஸ் மேல் நடவடிக்கை எடுக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆகியோர் கவனத்துக்கு கொண்டு சென்றார். கோரிக்கை மனுவின் முக்கியத்துவம் உணர்ந்து உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது.

இதையடுத்து துபாயில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் புலம் பெயர்ந்த சபியுல்லாவை சென்னைக்கு அழைத்து வர தேவையான நடவடிக்கை எடுக்கும்படி கடந்த 22-ந்தேதி அயலக நலத்துறை கமிஷனர் ஜெசிந்தா லாசரஸ் மின்னஞ்சல் வாயிலாக கேட்டுக்கொண்டார்.

இதையடுத்து விரைவாக நடவடிக்கை எடுத்த அதிகாரிகள், சென்னை வரும் விமானத்தில் பயணிகளுக்கு எந்தவிதமான நோய் தொற்றும் ஏற்படாத வகையிலும், நோயாளிக்கும் பாதிப்பு ஏற்டாத வகையிலும் விமானத்தில் 'ஸ்ட்ரக்சரில்', படுத்த நிலையிலேயே அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மேலும் சென்னைக்கு அழைத்து வரப்படும் சபியுல்லாவுக்கு சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சையை தொடரவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 8.30 மணிக்கு துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தில் படுக்கை வசதியுடன் சபியுல்லா அழைத்து வரப்பட்டார். பின்னர் ஆம்புலன்ஸ் வாயிலாக ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.

போக்குவரத்து இடையூறு இல்லாமல் அம்புலன்ஸ் செல்ல போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுத்தனர். இதனால் துபாயில் இருந்து சென்னை வந்ததும் குடியுரிமை, சுங்க சோதனைகள் முடித்து கொண்டு இரவு 9.30 மணியளவில் விமான நிலையத்தில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் மீனம்பாக்கம், பரங்கிமலை, ஆலந்தூர், கிண்டி, சைதாப்பேட்டை, நந்தனம், சிம்சன், சென்டிரல் வழியாக ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு நெரிசல் மிகுந்த அண்ணா சாலையின் வழியே இடையூறு இல்லாமல் 30 நிமிடங்களுக்கும் குறைவான நேரத்தில் அழைத்து செல்லப்பட்டார். ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சபியுல்லாவுக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வறுமை காரணமாக துபாய்க்கு வேலைக்கு சென்று நோய் வாய்ப்பட்டு நாடு திரும்ப முடியாமல் தவித்த சபியுல்லாவுக்கு உதவும்படி அவருடைய மனைவி கோரிக்கை மனு அளித்த 3 மணி நேரத்தில் விசாரிக்கப்பட்டு 5 நாட்களில் தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழா் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையத்தின் மூலம் நாடு திரும்ப நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story