கணவருடன், மோட்டார் சைக்கிளில் சென்ற ஆசிரியை, கீழே விழுந்து சாவு
வேதாரண்யத்தில், சாலையின் குறுக்கே நாய் ஓடியதால் கணவருடன், மோட்டார் சைக்கிளில் சென்ற ஆசிரியை, கீழே விழுந்து உயிரிழந்தார்.
வேதாரண்யம்:
வேதாரண்யத்தில், சாலையின் குறுக்கே நாய் ஓடியதால் கணவருடன், மோட்டார் சைக்கிளில் சென்ற ஆசிரியை, கீழே விழுந்து உயிரிழந்தார்.
ஆசிரியை தம்பதி
நாகை மாவட்டம் வேதாரண்யம் பயத்தவரன்காடு பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவருடைய மனைவி மலர்விழி(வயது 53). இருவரும் ஆசிரியர்கள். சம்பவத்தன்று பாலசுப்பிரமணியன் தனது மனைவி மலர்விழியுடன் மோட்டார் சைக்கிளில் கருப்பம்புலம் மாரியம்மன் கோவில் அருகே சென்று கொண்டிருந்தார்.
நாய் குறுக்கே வந்ததால் விபத்து
அப்போது சாலையின் குறுக்கே நாய் ஓடியதால் பாலசுப்பிரமணியன் திடீரென பிரேக் பிடித்துள்ளார். இதனால் மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்திருந்த மலர்விழி நிலைதடுமாறி கீழே விழுந்ததில் மலர்விழிக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கருப்பம்புலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பரிதாப சாவு
அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மலர்விழி நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பசுபதி, சப்-இன்ஸ்பெக்டர் கலியபெருமாள் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.