2 மதகுகள் பழுது அடைந்ததையொட்டி பூண்டி ஏரியில் அதிகாரிகள் குழுவினர் ஆய்வு


2 மதகுகள் பழுது அடைந்ததையொட்டி பூண்டி ஏரியில் அதிகாரிகள் குழுவினர் ஆய்வு
x

2 மதகுகள் பழுது அடைந்ததையொட்டி பூண்டி ஏரியில் அதிகாரிகள் குழுவினர் ஆய்வில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர்

ஆய்வு

சென்னை நகர மக்களின் குடிநீர் ஆதாரமாக பூண்டி ஏரி உள்ளது. இந்த ஏரியின் உயரம் 35 அடியாகும். இதில் 3.231 டி. எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம். கோடை காலங்களில் வெயில் காரணமாக இந்த ஏரி முழுவதுமாக வறண்டு விடும்போது சென்னையில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு பூண்டி ஏரியில் கூடுதல் தண்ணீரை சேமிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. பூண்டி ஏரியில் 16 மதகுகள் உள்ளன. அதில் 2 மதகுகள் பழுதடைந்துள்ளது.

இந்த நிலையில் நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் பூண்டி ஏரியை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது, நீர்த்தேக்கங்கள் மற்றும் ஏரிகளில் உள்ள ஆகாயத்தாமரை, பிற நீர் தாவரங்கள் மற்றும் இதர கழிவுப்பொருட்களை வருகிற பருவ மழைக்கு முன்பாக அகற்ற வேண்டும். இணைப்பு கால்வாய் இருபுறமும் சேதம் அடைந்துள்ள சாய்வு தளங்களை பராமரித்து கால்வாயின் இருபுறமும் குடியிருக்கும் மக்கள் கால்வாயில் குப்பை மற்றும் கழிவுகளை கொட்டாமல் தகவல் பலகைகள் வைத்து விழிப்புணர்வை ஏற்படுத்தி கண்காணிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.

ஆலோசனை

மேலும் சென்னையின் மிக முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி இணைப்பு கால்வாய்களில் தொழிற்சாலை மற்றும் குடியிருப்புகளில் இருந்து வரும் கழிவு நீரை கலப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் ஆலோசனை வழங்கினார். இந்த ஆண்டு பருவமழை முடிந்தவுடன் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. பூண்டி ஏரி முழுவதுமாக நிரம்பினால் உபரி நீரை மதகுகள் வழியாக திறந்து விடுவது வழக்கம். மொத்தம் உள்ள 16 மதகுகளில் 2 மதகுகள் பழுதடைந்துள்ளன.

இந்த மதகுகளில் பழுது நீக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளையும் அவர் ஆய்வு செய்தார். அப்போது குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாரிய நிர்வாக இயக்குனர் கிரிலோஷ் குமார், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், நீர்வளத்துறை முதன்மை தலைமை என்ஜினீயர் முத்தையா, நீர்வழத்துறை முதன்மை தலைமை என்ஜினியர் அசோகன், குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாரிய தலைமை பொறியாளர் ஜேசுதாஸ், திருவள்ளூர் கொசஸ்தலையாறு வடி நிலை கோட்ட செயற்பொறியாளர் பொதுப்பணி திலகம் மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

பின்னர் இவர்கள் புதிதாக கட்டப்பட்ட கண்ணன்கோட்டை - தேர்வாய் கண்டிகை ஏரியை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.


Next Story