கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு கத்தியுடன் வந்த வாலிபரால் பரபரப்பு
கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு கத்தியுடன் வந்த வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் கிராந்தி குமார் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். இதில் நடைபாதை வசதி, முதியோர் உதவித்தொகை, புதிய ரேஷன் கார்டு உள்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து பொதுமக்கள் மனு அளித்தனர்.
கோவை கலெக்டர் அலுவலக வளாகத்தில் தீக்குளிப்பு உள்ளிட்ட அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க போலீசார் குறைதீர்க்கும் கூட்டத்தின் போது மனு கொடுக்க வரும் பொதுமக்களை சோதனை செய்த பின்னரே மனு அளிக்க அனுமதித்து வருகின்றனர். அதன்படி நேற்று காலை போலீசார் பொதுமக்களை சோதனை செய்தனர். அப்போது 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் மனு அளிக்க வந்தார். போலீசார் அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அதில் காய்கறி வெட்டும் கத்தி-3 இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் வீட்டு உபயோகத்திற்காக கோவை டவுன்ஹாலில் இருந்து கத்தி வாங்கி வந்ததாக தெரிவித்தார்.
இதையடுத்து அவரிடம் இருந்து கத்தியை வாங்கி வைத்த போலீசார், மனு அளித்துவிட்டு திரும்பி வரும்போது தருவதாக தெரிவித்தனர். இதையடுத்து அந்த வாலிபர் தான் வைத்திருந்த 3 புதிய கத்திகளை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம் கொடுத்து விட்டு, மனு அளிக்க சென்றார். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.