கடலூரில் ரெயில் முன்பு பாய்ந்து வாலிபர் தற்கொலை காரணம் என்ன? போலீசார் விசாரணை
கடலூரில் ரெயில் முன்பு பாய்ந்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
திருப்பாதிரிப்புலியூர்,
கடலூர் பாரதிதாசன் நகரை சேர்ந்தவர் கணேசன் மகன் கலைச்செல்வன் (வயது 26), தொழிலாளி. பெற்றோரை இழந்த இவர், தனியாக வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ரெயில் நிலையத்திற்கு சென்றார். அப்போது நள்ளிரவு 12.35 மணி அளவில் சென்னையில் இருந்து காரைக்கால் நோக்கி கம்பன் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்து கொண்டிருந்தது. அந்த ரெயில் திருப்பாதிரிப்புலியூர் ரெயில் நிலையத்திற்குள் வந்த போது, கலைச்செல்வன் ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கிருந்த பயணிகள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் கடலூர் முதுநகர் ரெயில்வே போலீசார் விரைந்து வந்து, பலியான கலைச்செல்வன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கலைச்செல்வன் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.