ரெயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை
நாகர்கோவிலில் ரெயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். அவர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் ரெயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். அவர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வாலிபர் பிணம்
நாகர்கோவில் கட்டையன்விளை பகுதியில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் நேற்றுமுன்தினம் இரவு ஒருவர் தலையில் பலத்த காயத்துடன் பிணமாக கிடந்தார். இதை பார்த்தவர்கள் நாகர்கோவில் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பழனி, விஜயகுமார் மற்றும் பிரைட் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்த்தனர். அப்போது அங்கு பிணமாக கிடந்தவருக்கு 30 வயது இருக்கும் என தெரிய வந்தது. உடனே வாலிபர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ரெயில் முன் பாய்ந்தார்
பிணமாக கிடந்தவர் பெயர் மற்றும் ஊர் விவரம் தெரியவில்லை. அவர் பூணூல் மற்றும் கருப்பு நிற பேண்டு, காபி நிற டி-சர்ட் அணிந்திருந்தார். போலீசார் நடத்திய விசாரணையில், அவர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
அதாவது நேற்று முன்தினம் இரவு 11.20 மணி அளவில் மங்களூருவில் இருந்து ஏரநாடு எக்ஸ்பிரஸ் ரெயில் நாகர்கோவில் கட்டையன்விளை பகுதியில் வந்தது. அப்போது ரெயில் தண்டவாளத்தில் வாலிபர் ஒருவர் ஓடி வந்தார். இதை பார்த்ததும் ரெயிலின் ஹாரனை டிரைவர் ஒலிக்க செய்து எச்சரித்து உள்ளார். ஆனாலும் கண்ணிமைக்கும் நேரத்தில் ரெயில் வாலிபர் மீது மோதியதில் தலையின் பின்பகுதி சிதைந்து இறந்தார். அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவில்லை. இதுதொடர்பாக ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.