பாலத்தில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி
பாலத்தில் மோட்டார் சைக்கிள் மோதியதில் வாலிபர் பலியானார்.
கந்தர்வகோட்டை அருகே உள்ள ஆணை விழுந்தான் கேணி கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம். இவருடைய மகன் மணிமுத்து (வயது 22). அதே ஊரைச் சேர்ந்த காளிமுத்து மகன் ஆனந்த் (21). நண்பர்களான இவர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் கந்தர்வகோட்டைக்கு சென்று விட்டு தச்சன்குறிச்சி வழியாக ஆணை விழுந்தான் கேணிக்கு சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை மணிமுத்து ஓட்டி சென்றார். வல்லம் புதூர் பிரிவு சாலையில் உள்ள வளைவில் திரும்பியபோது எதிர்பாராதவிதமாக பாலத்தில் மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட மணிமுத்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த ஆனந்த்தை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மீட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த விபத்து குறித்து கந்தர்வகோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.