கிணற்றில் தவறி விழுந்து வாலிபர் பலி


கிணற்றில் தவறி விழுந்து வாலிபர் பலி
x

கிணற்றில் தவறி விழுந்து வாலிபர் உயிரிழந்தார்.

பெரம்பலூர்

கிணற்றில் விழுந்தார்

பெரம்பலூர் அருகே நொச்சியம் கிராமத்தை சோ்ந்தவர் சுப்பிரமணியன். இவர் தனது குடும்பத்தினருடன் சென்னை வடபழனி சைதாப்பேட்டை ரோடு பகுதியில் வசித்து வருகிறார். சுப்பிரமணியனின் மகன் லோகேஷ் (வயது 20). இவர் அங்குள்ள ஒரு சினிமா தியேட்டரில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் லோகேஷ் எளம்பலூர் 3-வது வார்டில் வசிக்கும் உறவினரான சின்னையன் என்பவரின் வீட்டிற்கு நேற்று மதியம் வந்தார்.

பின்னர் அவர் இயற்கை உபாதை கழிப்பதற்காக எளம்பலூர்-பெரம்பலூர் சாலையில் உப்போடை பகுதியில் சின்னையன் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்யும் நிலத்துக்கு சென்றார். பின்னர் அவர் கால் கழுவுவதற்காக விவசாய கிணற்றில் இறங்கியபோது தவறி உள்ளே விழுந்தார்.

பிணமாக மீட்பு

கிணற்றுக்கு சென்ற லோகேஷ் வெகு நேரமாகியும் திரும்பி வராததால், அங்கு மாடு மேய்த்து கொண்டிருந்த சின்னையனின் பேரன் அவினாஷ் சந்தேகமடைந்து கிணற்றுக்கு சென்று பார்த்தார். அப்போது கிணற்றில் லோகேசின் காலணியும், சட்டையும் கிடந்துள்ளது. இதையடுத்து அவினாஷ் கிணற்றில் குதித்து லோகேசை தேடினார். இதில் லோகேசை பிணமாக மீட்டு வெளியே கொண்டு வந்தார்.

பின்னர் இதுகுறித்து அவினாஷ், உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார். மேலும் தகவல் அறிந்து பெரம்பலூர் போலீசாரும் சம்பவ இடத்துக்கு சென்றனர். லோகேசின் உடலை அவரது உறவினர்கள் பார்த்து கதறி அழுதது காண்போரை கண்கலங்க செய்தது. பின்னர் லோகேசின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story