கிணற்றில் தவறி விழுந்து வாலிபர் சாவு
கிணற்றில் தவறி விழுந்து வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
இட்டமொழி:
நாங்குநேரி அருகே உள்ள சிங்கநேரி வடக்குத்தெருவை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் மகன் ராஜேந்திரன் (வயது 32). லாரி டிரைவரான இவர் பரப்பாடி அருகே பொத்தையடி பகுதியில் தனியாருக்கு சொந்தமான தோட்டத்தை குத்தகை எடுத்து விவசாயமும் செய்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு சாப்பிட்டுவிட்டு தோட்டத்தில் தூங்கினார். பின்னர் அங்குள்ள கிணற்றில் ராஜேந்திரன் தவறி விழுந்து இறந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவருடன் தூங்குவதற்காக வந்த அவரது நண்பர்கள் சரத்குமார், செந்தில் ஆகியோர் அவர் கிணற்றில் விழுந்து கிடப்பது குறித்து வடக்கு விஜயநாராயணம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
பின்னர் போலீசார் மற்றும் நாங்குநேரி தீயணைப்பு துறையினர் வந்து ராஜேந்திரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.