கிணற்றில் தவறி விழுந்து வாலிபர் பலி


கிணற்றில் தவறி விழுந்து வாலிபர் பலி
x

ஜோலார்பேட்டை அருகே கிணற்றில் தவறி விழுந்து வாலிபர் பலியானார்.

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டையை அடுத்த மண்டலவாடி ஊராட்சி கவுண்டப்பனூர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 35). வெளிநாட்டில் வேலை செய்து வந்த இவர் தற்போது விவசாயம் செய்து வந்தார். இந்தநிலையில் தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் உள்ள 60 அடி ஆழம் கொண்ட விவசாய கிணற்றை சுற்றி புதர் போல் முளைத்திருந்த புல்லை அப்புறப்படுத்தி அதனை கட்டாக கட்ட முயன்றுள்ளார். அப்போது நிலை தடுமாறி 60 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் விழுந்தார்.

நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கியுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் அவர் வீட்டுக்கு வராததால் அங்கு சென்று பார்த்தபோது கிணற்றின் அருகே கட்டாக கட்டிய புல் கட்டு கிடந்தது. இதனால் சந்தேகம் அடைந்து வாணியம்பாடி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் சுமார் 2 மணி நேரத்திற்கு மேல் போராடி கோவிந்தராஜை பிணமாக மீட்டனர்.

மேலும் தகவல் அறிந்த ஜோலார்பேட்டை இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கோவிந்தராஜ் உடலை பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து அவரது தந்தை மாணிக்கம் கொடுத்த புகாரின் பேரில் ஜோலார்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கிணற்றில் தவறி விழுந்து இறந்த கோவிந்தராஜுக்கு தீபா என்ற மனைவியும்,2 குழந்தைகளும் உள்ளனர். மேலும் தீபா தற்போது நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story