மோட்டார் சைக்கிளுடன் தவறி விழுந்து வாலிபர் பலி


மோட்டார் சைக்கிளுடன் தவறி விழுந்து வாலிபர் பலி
x

சாலை விரிவாக்க பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் மோட்டார் சைக்கிளுடன் தவறி விழுந்து வாலிபர் பலியானார்.

திருநெல்வேலி

சேரன்மாதேவி:

சாலை விரிவாக்க பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் மோட்டார் சைக்கிளுடன் தவறி விழுந்து வாலிபர் பலியானார்.

வாலிபர்

நெல்லை மாவட்டம் சுத்தமல்லி அருகே உள்ள நரசிங்கநல்லூரைச் சேர்ந்த மாரியப்பன் மகன் மணிகண்டன் (வயது 22). பெயிண்டரான இவர், தனது நண்பரிடம் மோட்டார் சைக்கிளை இரவல் வாங்கிக் கொண்டு நரசிங்கநல்லூரில் இருந்து நேற்று அதிகாலையில் வீரவநல்லூர் நோக்கி வந்து கொண்டிருந்தார்.

சேரன்மாதேவி அருகே உள்ள கூனியூரில் அரசு போக்குவரத்துக்கழக பணிமனை அருகில், சாலை விரிவாக்க பணிக்காக சாலையின் குறுக்கே பாலம் கட்டுவதற்காக தோண்டப்பட்டுள்ள பள்ளத்தில் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளுடன் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்ததும் சேரன்மாதேவி போலீசார் அவரது உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்

பத்தமடையைச் சேர்ந்த சுப்பையா மகன் முத்துராஜ் (24). இவர் தனது மனைவியுடன் வீரவநல்லூரில் வசித்து வந்தார். முத்துராஜ் அம்பை சர்வோதயா சங்கத்தில் ஒப்பந்தப் பணியாளராக பணி செய்து வந்தார். நேற்று காலை நெல்லையை நோக்கி மோட்டார் சைக்கிளில் புறப்பட்டுச் சென்றார். வீரவநல்லூரில் புறவழிச்சாலையை இணைக்கும் சாலையில், அங்குள்ள டாஸ்மாக் கடை அருகில் முன்னால் சென்ற வேனை முத்துராஜ் முந்தி செல்வ முயன்றார்.

அப்போது எதிரே வந்த சரக்கு வாகனம் மோதியதில் தலையில் பலத்த காயமடைந்த முத்துராஜ், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்ததும் வீரவநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரது உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story