கடலில் மூழ்கி வாலிபர் சாவு


கடலில் மூழ்கி வாலிபர் சாவு
x
தினத்தந்தி 21 Aug 2023 12:45 AM IST (Updated: 21 Aug 2023 12:45 AM IST)
t-max-icont-min-icon

பூம்புகாரில் கடலில் மூழ்கி வாலிபர் பரிதாபமாக இறந்தார். மற்றொருவரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

மயிலாடுதுறை

பூம்புகாரில் கடலில் மூழ்கி வாலிபர் பரிதாபமாக இறந்தார். மற்றொருவரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

கடலில் மூழ்கி மாயம்

மயிலாடுதுறை மூங்கில் தோட்டம், மெயின்ரோடு பகுதியைச்சேர்ந்த ரவி மகன் அரவிந்தன் என்கிற கணேஷ்குமார் (வயது26), பர்மா காலனி பகுதியை சேர்ந்த பாலமுருகன் (31), ஆகியோர் உள்பட 6 பேர் நேற்று மாலை பூம்புகார் கடற்கரைக்கு சுற்றுலா வந்தனர். அப்போது அவர்கள் கடலில் இறங்கி குளித்தனர்.

இதில் திடீரென ஏற்பட்ட ராட்சத அலையில் சிக்கி பாலமுருகன், அரவிந்தன் ஆகிய 2 பேரும் கடலில் மாயமாயினர். இதனால் அதிர்ச்சி அடைந்த உடன் வந்த நண்பர்கள், உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

பிணமாக மீட்பு

அதன்பேரில் பூம்புகார் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன், கடலோர காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் திருமலை, தனிப்பிரிவு சப்- இன்ஸ்பெக்டர் ரவி உள்ளிட்ட போலீசார் மற்றும் பூம்புகார் தீயணைப்பு நிலைய சிறப்பு அலுவலர் துரைமுருகன் தலைமையிலான வீரர்கள் அங்கு விரைந்து சென்று கடலில் மாயமான 2 பேரையும் தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் நேற்று இரவு 7 மணி அளவில் அரவிந்தன் பூம்புகார் கண்ணகி சிலை அருகே பிணமாக கரை ஒதுங்கினார்.

அவருடைய உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பாலமுருகனின் கதி என்ன? என்பதை அறிய அவரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இறந்த அரவிந்தனுடைய உடலை பார்த்து உறவினர்கள் மற்றும் அவருடைய நண்பர்கள் கதறி அழுதது அங்கிருந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியது.


Next Story